புதுவையில் நாளை முதல் மீண்டும் ஆக்கிரமிப்பு அகற்றம்: கலெக்டர் அருண் அறிவிப்பு

புதுச்சேரி, நவ. 13:  புதுச்சேரியில் பிரதான சாலை ஓரங்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற கடந்த ஏப்ரல் 23ம் தேதி கலெக்டர் அருண் தலைமையில் நடைபெற்ற மாவட்ட சாலை பாதுகாப்பு கமிட்டி கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டு, நகராட்சி, வருவாய், பொதுப்பணித்துறை, மின்துறை மற்றும் காவல்துறை சேர்ந்து, குழுவாக ஆக்கிரமிப்புகளை கடந்த ஏப்ரல் 29ம் தேதி முதல் மே 21ம் தேதி வரையிலும், ஜூன் 17ம் தேதி முதல் ஜூலை 11ம் தேதி வரையிலும், ஜூலை 31ம் தேதி முதல் செப்டம்பர் 26ம் தேதி வரையிலும் 3 கட்டமாக ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட்டது. தற்போது ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்ட இடங்களில் மீண்டும் புதிதாக ஆக்கிரமிப்புகள் ஏற்படுவதாக புகார்கள் வந்தவண்ணம் உள்ளதால், மீண்டும் சாலை வாரியாக நடைபாதை ஆக்கிரமிப்புகளை அகற்ற கலெக்டர் அருண் உத்தரவிட்டுள்ளார். அதனை தொடர்ந்து, அனைத்து துறை குழுவானது நாளை (14ம் தேதி) முதல் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி மேற்கொள்ளப்பட உள்ளது.

இது தொடர்பாக புதுச்சேரி கலெக்டர் மற்றும் மாவட்ட சாலை பாதுகாப்புக்குழு தலைவர் அருண் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், நாளை முதல் ஆக்கிரமிப்புகள் அகற்றும்பணி மீண்டும் மேற்கொள்ளப்பட இருப்பதால் ஆக்கிரமிப்பாளர்கள் தாமாக முன்வந்து ஆக்கிரமிப்புகளை அகற்றும்படி கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். தவறும்பட்சத்தில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும். அதுமட்டுமின்றி, அபராதம் மற்றும் நகராட்சி தொழில் உரிமம் ரத்து போன்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும், என தெரிவித்துள்ளார். பட்டியலின்படி, நாளை, கடலூர் சாலை வெங்கடசுப்பாரெட்டியார் சாலை அருகில் இருந்து மரப்பாலம் சந்திப்பு வரையிலும் ஆக்கிரமிப்பு அகற்றப்படுகிறது. வரும் ஜனவரி 10ம் தேதி வரை பல்வேறு இடங்களில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட உள்ளது.

Related Stories: