கஞ்சா, ரவுடியிசத்தை தடுக்க தனி எஸ்பி நியமனம் வெடிகுண்டு கலாசாரம் ஒழிக்கப்பட வேண்டும்

புதுச்சேரி, நவ. 13: புதுச்சேரியில் வெடிகுண்டு கலாசாரம் முழுமையாக ஒழிக்கப்பட வேண்டுமென காவல்துறைக்கு முதல்வர் நாராயணசாமி உத்தரவிட்டுள்ளார். புதுச்சேரி கடந்த சில நாட்களில் இரண்டு கொலைகள் நடந்திருப்பது பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சர்வசாதாரணமாக நாட்டு வெடிகுண்டு வீசி கொலை செய்யும் போக்கு அதிகரித்திருப்பது கவலையடை செய்துள்ளது. குற்றவாளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் அரசை வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில், சட்டம்-ஒழுங்கு பாதுகாப்பு குறித்து காவல்துறை தலைமையகத்தில் கருத்தரங்கு அறையில் முதல்வர் நாராயணசாமி தலைமையில் நேற்று கூட்டம் நடைபெற்றது.

இதில், தலைமை செயலர் அஸ்வனி குமார், டிஜிபி பாலாஜி ஸ்ரீவஸ்தவா, சீனியர் எஸ்பிக்கள் ராகுல் அல்வால், நிகாரிகா பட், அகன்ஷியா யாதவ் மற்றும் சட்டம்-ஒழுங்கு எஸ்பிக்கள், இன்ஸ்பெக்டர்கள் என 40க்கும் மேற்பட்டோர் லந்து கொண்டனர். கூட்டத்தில், நாட்டு வெடிகுண்டு தயாரித்து பயன்படுத்தும் ரவுடிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். ரவுடிகளின் நடவடிக்கையை தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம் குற்றச்செயல்களை குறைக்க முடியும். குற்றவாளிகள் ஜாமீனில் உடனுக்குடன் வெளியே வருவதை தடுக்கும் வகையில் உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து சிறையில் தள்ள வேண்டும் என அறிவுறுத்தினார்.

பின்னர் வெளியே வந்த முதல்வர் கூறுகையில், ரவுடிகளுக்குள் மோதல் ஏற்பட்டு கொலைகள் நடந்து வருகிறது. அதோடு கஞ்சா தாரளமாக விற்கிறது என்ற புகாரும் வந்திருக்கிறது. காவல்துறையை பொருத்தவரை மக்களின் உயிர், உடமைக்கு பாதுகாப்பினை உறுதிப்படுத்த வேண்டும்.

புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகள் சுதந்திரமாக நடமாட உதவியாக இருப்பதோடு, மக்களின் நண்பனாக கால்துறை செயல்பட வலியுறுத்தினேன். சிறையில் இருந்து ரவுடிகளை ஏவி பணம் பறித்தல் தடுக்கப்பட வேண்டும். குறிப்பாக கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் தடுப்பு நடவடிக்கைக்காக தனியாக எஸ்பி தலைமையில் நார்கோட்டிக் பிரிவும், ரவுடிகளை ஒடுக்க எஸ்பி தலைமையில் தனிப்பிரிவு ஏற்படுத்தப்படும்.

காவல்துறை பணியிடங்கள் நிரப்புவதற்கும், கோரிமேடு காவலர் குடியிருப்பை சீரமைத்தல், காவல்நிலையங்கள் புதிதாக கட்டப்பட வேண்டியிருக்கிறது. எஸ்பி, இன்ஸ்பெக்டர், சப்- இன்ஸ்பெக்டர், காவலர் வரையிலான பணியிடங்கள் காலியாக இருக்கிறது. இது தொடர்பாக அனைத்தையும் செய்து சட்டம்- ஒழுங்கை கட்டுக்குள் வைக்க நடவடிக்கை எடுக்கப்படும். சிறையில் இருந்து பல குற்றங்களை செய்பவர்கள் மீது மேலும் பல வழக்குகளை போட்டு நடவடிக்கை எடுக்கப்படும். சிறையில் பொருத்தப்பட்டுள்ள ஜாமர் கருவி சில நெட்வொர்க்குகளை கட்டுப்படுவதில்லை. அதுமட்டும் இல்லாமல், சிறையில் இருப்பவர்களே செல்போனை கைதிகளிடம் கொடுக்கின்றனர். அங்குள்ள புல் தரையில் செல்போனை புதைத்து வைக்கும் போக்கை களைய வேண்டுமென கூறியிருக்கிறேன்.

நாட்டு வெடிகுண்டு அரியாங்குப்பத்தில் இருந்துதான் உருவாகிறது. அதனை தயாரிப்பவர்கள் யார் என்று தெரியும். காவல்துறைக்கு தெரியும், நாட்டு வெடிகுண்டு கலாசாரத்தை முழுமையாக ஒழிக்க வேண்டுமென கூறியிருக்கிறேன். எஸ்பி-11, சப்- இன்ஸ்பெக்டர்-112, காவலர்-900 பணியிடங்கள் காலியாக இருக்கிறது. இதனை உடனே நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்த கூட்டம் எனக்கு திருப்தியளிக்கிறதா என்பதை விட புதுச்சே மக்களுக்கு திருப்தியளிக்கும் வகையில் இருந்தால்தான் காவல்துறையை பாராட்டுவேன். ரவுடிகளை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய ஆகும் செலவை முதல்வர் நிவாரண நிதி ஏற்றுக்கொள்ளும். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: