திடீரென வழக்கு போட்டு மிரட்டுவதா? விவசாயிகளை திரட்டி விரைவில் போராட்டம்

புதுச்சேரி, நவ. 8:  விவசாயிகள் மீது வழக்கு போட்டுள்ளதை கண்டித்து  விரைவில் போராட்டம் நடத்தபடுமென டிபிஆர் செல்வம் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். திருக்கனூர்  அடுத்த லிங்காரெட்டிப்பாளையம் கூட்டுறவு சர்க்கரை ஆலையில் கடந்த 2016ம்  ஆண்டு  நிலுவை தொகை வழங்கக்கோரி விவசாயிகள் போராட்டம் அறிவித்தனர். முன்கூட்டியே இதற்கான அனுமதியும் பெறப்பட்டது. ஆனால் திடீரென சட்டம் ஒழுங்கு  பிரச்னையை காரணம் காட்டி போலீசார் மறுப்பு தெரிவித்துவிட்டனர். இருப்பினும் தடையை மீறி டிபிஆர் செல்வம் எம்எல்ஏ தலைமையில் விவசாயிகள்  ஆலையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது, போலீசாருக்கும்  விவசாயிகளுக்கும் இடையே கடுமையான மோதல் ஏற்பட்டது.   விவசாயிகள்  மீது தடியடி நடத்தி போராட்டத்தை கலைத்தனர். இதில் விவசாயிகள் பலர் காயமடைந்தனர். இதுதொடர்பாக  நடந்த சமாதான கூட்டத்தில், நிலுவை தொகை  உடனே வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். போலீஸ்- விவசாயிகள் என இரு தரப்பிலும் புகார் செய்யமாட்டோம் என உறுதி மொழி கொடுத்தனர். இதனை தொடர்ந்து பல ஆண்டுகளாக வழங்க வேண்டிய நிலுவைத்தொகை ரூ. 16 கோடி மற்றும் 2017-2018ம் ஆண்டுக்கான நிலுவை ரூ.7.75 கோடியை ஆலை நிர்வாகம் இன்னமும் வழங்கவில்லை.

Advertising
Advertising

இதற்கிடையே  கரும்புக்கான நிலுவை தொகையை உடனே வழங்கக்கோரி மீண்டும் விவசாயிகள் போராட்டம் அறிவித்தனர்.  காமராஜர் நகர் இடைத்தேர்தலையொட்டி தேர்தல் விதிகள் நடைமுறையில் இருந்ததால்  போராட்டம்  விலக்கிக்கொள்ளப்பட்டது. இந்நிலையில், சமாதான கூட்டத்தில் வாக்குறுதியை மீறி 8 விவசாயிகள் மீது 5 பிரிவுகளின் கீழ்  வழக்கு பதிவு செய்யப்பட்டு சம்மன் அனுப்பி வைக்கப்பட்டது. இதனால்  விவசாயிகள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதுதொடர்பான வழக்கு புதுச்சேரி உரிமையியல் நீதிமன்றத்தில்  விசாரணை வந்தது. வழக்கில் ஆஜராக டிபிஆர் செல்வம் தலைமையில் விவசாயிகள் வந்தனர். அப்போது போராட்டம் நடத்தப்போவதாக தகவல் பரவியது. அவர்களிடம் நீதிமன்ற பணியில் இருந்த போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது வழக்கில் ஆஜராக வந்ததாக தெரிவித்தனர். மீண்டும் இந்த வழக்கை வரும் 26ம் தேதி ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து டிபிஆர் செல்வம் எம்எல்ஏ  கூறுகையில், ஆளும் காங்கிரஸ் அரசு விவசாயிகளை தொடர்ந்து புறக்கணித்து  வருகிறது. நிலுவை தொகை ரூ.23.75 கோடிக்கு மேல் பாக்கி வைத்துள்ளனர். வெட்டி  அனுப்பிய கரும்புக்கு கூட பணம் கொடுக்காமல் இத்தனை ஆண்டு காலம்  இழுத்தடிப்பது நியாயமா?. எப்படி விவசாயம் செய்ய முடியும். அரியர்ஸ் கேட்டு போராட்டம் நடத்த திட்டமிட்டிருந்த நிலையில் அவர்களை மிரட்டும் வகையில் 8 விவசாயிகள் மீது வழக்கு போட்டிருக்கின்றனர். அரசு ஊழியர்களை பணி செய்ய விடாமல் தடுத்தல் உள்ளிட்ட  5  பிரிவுகளின் கீழ்  வழக்கு போட்டுள்ளனர். இது நம்பிக்கை  துரோகம். விவசாயிகள் நலனில் துளியும் அக்கறை இல்லை. எனவே இதனை கண்டித்து மாநிலம் முழுக்க உள்ள விவசாயிகளை திரட்டி என்.ஆர்.காங்கிரஸ்  போராட்டம் நடத்தும். என்றார்.

Related Stories: