₹4 லட்சம் மதுபாட்டில்கள் பறிமுதல்

காரைக்கால், நவ. 8:  காரைக்கால்  கடற்கரையில் பதுக்கி வைத்திருந்த ரூ. 4 லட்சம் மதிப்புள்ள மதுபாட்டில்களை  போலீசார் பறிமுதல் செய்தனர். இவற்றை படகில் கடத்தி சென்று தமிழகத்தில் விற்க  முயன்றது  தெரிய வந்துள்ளது. இது தொடர்பாக தலைமறைவான வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.  புதுச்சேரி மாநிலத்தில் இருந்து அண்டை மாநிலமான  தமிழகத்திற்கு மதுபாட்டில்கள் கடத்தப்படுவது தொடர்கதையாக நடந்து வருகிறது. போலீசார் அவ்வப்போது, வாகன சோதனை நடத்தி மதுபாட்டில்களை பறிமுதல் செய்து  வருகின்றனர். இந்நிலையில் புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த  காரைக்கால்மேடு அம்மன்கோவில் பத்து மீனவர் கிராமத்தில் நேற்று முன்தினம்  அதிகாலை 1 மணியளவில் ஒரு லாரி கொள்ளளவு கொண்ட ரூ. 4 லட்சம் மதிப்புள்ள சுமார்  136 பெட்டி  மதுபாட்டில்கள் குவித்து வைக்கப்பட்டிருந்தது. தகவலறிந்த அப்பகுதி இளைஞர்கள் அங்கு சென்று ெசல்போனில் வீடியோ எடுத்து, தகுந்த  ஆதாரத்துடன் நகர காவல்நிலையத்துக்கு அனுப்பி வைத்தனர்.

இதையடுத்து  சீனியர் எஸ்பி மகேஷ்குமார் பர்ன்வால் மற்றும் எஸ்பி வீரவல்லவன்  உத்தரவின்பேரில் இன்ஸ்பெக்டர் ஏழுமலை மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்றனர். அங்கு கடத்துவதற்காக வைக்கப்பட்டிருந்த மதுபாட்டில்  பெட்டிகள்  பறிமுதல் செய்து கலால் துறையிடம் ஒப்படைத்தனர். விசாரணையில் இந்த மதுபாட்டில்களை படகில்  கடத்தி சென்று தமிழகத்தில் விற்பனை செய்ய திட்டமிட்டிருந்தது தெரியவந்தது. அதே பகுதியை சேர்ந்த ஜீவானந்தன்  மகன் நிஜித்குமார் (34)  மதுபாட்டில்களை கடத்திச்சென்று விற்க முயன்றது தெரியவந்தது. இதையடுத்து தலைமறைவான  நிஜித்குமாரை போலீசார் தேடி வருகின்றனர். மேலும் மதுபாட்டில்களை பறிமுதல்  செய்து மாவட்ட கலால்துறையிடம் ஒப்படைத்தனர். இச்சம்பவம்  அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Related Stories: