பொதுமக்களுக்கு தற்கொலை தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்

நெட்டப்பாக்கம், நவ. 8:  தற்கொலையை தடுக்கும் வகையில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு அளிக்க நெட்டப்பாக்கம் போலீசாருக்கு சீனியர் எஸ்பி அறிவுரை கூறினார். புதுச்சேரி டிஜிபி உத்தரவின் பேரில், சீனியர் எஸ்பி ராகுல் அல்வால் புதுவை மற்றும் கிராமப்புற பகுதிகளில் உள்ள காவல் நிலையங்களுக்கு ஆய்வு மேற்கொண்டு வருகிறார். அதன்படி நெட்டப்பாக்கம் காவல் நிலையத்தில் நேற்று காலை 10 மணிக்கு ஆய்வு பணிக்கு வந்த ராகுல் அல்வால் முக்கிய பதிவேடுகளை ஆய்வு செய்தார். ரவுடிகள் மீதான கண்காணிப்பு, குற்ற வழக்குகள் பதிவேடு, நிலுவையில் உள்ள வழக்குகள் தொடர்பானவற்றை கேட்டறிந்தார். பின்னர் போலீஸ் நிலைய வளாக பகுதிகள், காவலர் ஓய்வு அறை, எழுத்தர் பிரிவு, கைதிகள் அறை போன்றவற்றை பார்வையிட்டார். பொதுமக்களிடம் இருந்து வரும் புகார்களின் அடிப்படையில் விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார். கிராமப்புறங்களில் தற்கொலைகள் அதிகம் நடைபெற்று வருகிறது. இதற்கு போலீசார் சரியான விழிப்புணர்வை பொதுமக்களிடம் கொண்டு செல்வதில்லை. இன்ஸ்பெக்டர் தலைமையில் தற்கொலை தொடர்பான விழிப்புணர்வு கருத்துகளை காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமப்புறங்களுக்கு சென்று பொதுமக்களுக்கு அளிக்க வேண்டும். அவ்வப்போது வாகன சோதனைகள் மேற்கொண்டு, போக்குவரத்து விதிகளை கடைபிடிக்காதவர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார். இந்த ஆய்வில் இன்ஸ்பெக்டர் கலைச்செல்வன், சப்-இன்ஸ்பெக்டர் விபல்குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

Related Stories: