துப்புரவு ஊழியர்கள் புதுடெக்னிக் குப்பை கொட்டுவதை தடுக்க சாமி சிலை வைத்து வழிபாடு

கள்ளக்குறிச்சி, நவ. 8: கள்ளக்குறிச்சி நகராட்சி பகுதியில் 21 வார்டுகள் அமைந்துள்ளது. ஒவ்வொரு வார்டுகளிலும் மெயின் தெரு, குறுக்கு தெரு என 10க்கும் மேற்பட்ட தெருக்கள் அமைந்துள்ளது. அப்பகுதியில் உள்ள குடியிருப்பு வீடுகள் மற்றும் சிறு வணிக கடைகள், தொழில் நிறுவனங்கள் ஆகிய பகுதியில் இருந்து மக்கும் குப்பைகள், மக்காத குப்பைகள் என பிரித்து நேரடியாக சேகரிக்கப்படுகின்ற குப்பைகளை நகராட்சி துப்புரவு ஊழியர்கள் வாகனத்தின் மூலம் தினமும் வெளியேற்றுகின்றனர். இந்நிலையில் ஒருசில மக்கள் வீடுகளில் சேகரித்து வைக்கப்பட்டுள்ள குப்பைகளை தரம் பிரித்து துப்புரவு ஊழியர்களிடம் கொடுக்காமல் சாலை பகுதியில் குப்பைகளை கொட்டுவதால் அசுத்தம் ஏற்படுகிறது. மேலும் துர்நாற்றம் ஏற்படுவதோடு பல்வேறு தொற்று நோய் ஏற்படுகிறது எனவே தெரு பகுதியில் சாலையின் ஓரமாக குப்பைகளை கொட்ட வேண்டாம் என நகராட்சி துப்புரவு ஊழியர்கள் பொதுமக்களிடம் அவ்வப்போது கேட்டு கொண்டனர்.    

ஆனாலும் சில இடங்களில் சாலையின் ஓரமாகவே தொடர்ந்து குப்பைகளை மக்கள் கொட்டிவந்தனர். இதற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என துப்புரவு ஊழியர்கள் முடிவெடுத்தனர். அதன்படி குடியிருப்பு மக்கள் சாலை பகுதியில் குப்பை கொட்டுவதை தடுக்க ஒரே வழி எனக்கூறி குப்பை கொட்டும் பகுதியில் சாமி சிலை வைத்து தினமும் வழிபாடு செய்து வந்தால் மக்கள் அந்த பகுதியில் கண்டிப்பாக குப்பைகளை கொட்டுவதை தடுக்க முடியும் என நினைத்து 3 வது வார்டு கேசவேலு நகர் பகுதியில் மின்மாற்றி அருகே ஏற்கனவே அப்பகுதி மக்கள் குப்பைகள் கொட்டி வந்த இடத்தில் நூதனமுறையில்  துப்புரவு ஊழியர்கள் சாமி சிலை கல் ஒன்று வைத்து அதில் சிகப்பு, மஞ்சள் பொட்டு வைத்து வழிபாடு செய்தனர்.

இதனால் அந்த பகுதியில் தற்போது யாரும் குப்பைகள் கொட்டுவதை நிறுத்திவிட்டனர். இதுபோன்றே 16 வது வார்டு கவரை தெரு பகுதியில் ஏற்கனவே குப்பை கொட்டப்பட்ட பகுதியிலும் துப்புரவு ஊழியர்கள் சிலை கல் ஒன்று வைத்து அதில் சிகப்பு, மஞ்சள் பொட்டு மற்றும் பூ வைத்து வழிபாடு செய்து வருகின்றனர்.     தற்போது அந்த பகுதியில் யாரும் குப்பைகள் கொட்டுவது கிடையாது. சாலை பகுதியில் கண்ட இடங்களில் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் குப்பைகள் கொட்டுவதை தடுக்கும் விதமாக நகராட்சி துப்புரவு ஊழியர்கள் கடந்த சில தினங்களாகவே நூதனமுறையில் சாமிசிலை கல் வைத்து வழிபாடு செய்து வருகின்ற சம்பவம் கள்ளக்குறிச்சி பொதுமக்களிடையே நல்ல வரவேற்பை ஏற்படுத்தியுள்ளது. எது எப்படியோ பொது இடத்தில் அசுத்தம் ஏற்படாமல் இருக்க நகராட்சி துப்புரவு ஊழியர்கள் புது யுக்தியை கையாண்டு வருகின்ற சம்பவம் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை ஏற்படுத்தி உள்ளது. இதுபோன்று மற்ற இடங்களிலும் குப்பை கொட்டுவதை தடுக்க துப்புரவு ஊழியர்கள் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என சமூக ஆர்வலர்கள் வேண்டுகோள் வைத்துள்ளனர்.

Related Stories: