பட்டியலின மக்களின் உரிமைகளை தவிர மற்ற வழக்கில் தேசிய எஸ்.சி., எஸ்.டி ஆணையத்துக்கு உத்தரவிட அதிகாரம் இல்லை

சென்னை, மார்ச் 26: ‘‘பட்டியலின சமுதாயத்தினருக்கான உரிமைகள் மறுக்கப்படும்போது மட்டுமே, தேசிய தாழ்த்தப்பட்டோர் ஆணையம் உத்தரவுகளை பிறப்பிக்க முடியும்’’ என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், வி.மாதேபள்ளி கிராமத்தை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரரான ஜெயராமன் சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பொதுநல மனுவில், வி.மாதேபள்ளியில் உள்ள சக்கியம்மன் கோயிலுக்கு சொந்தமான 3.75 ஏக்கர் நிலத்தை சீனிவாசன் என்பவர் ஆக்கிரமித்துள்ளார் குறிப்பிட்டு இருந்தார். இது குறித்து தேசிய பட்டியலின ஆணையத்தில் சீனிவாசன் புகார் அளித்தார். புகாரை விசாரித்த பட்டியலின ஆணையம், ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க கூடாது என்று இந்து சமய அறநிலையத்துறைக்கு உத்தரவிட்டது.

இந்நிலையில், ஜெயராமன், தாக்கல் செய்த மனுவை விசாரித்த  நீதிமன்றம், தீர்ப்புக்கு இடைக்கால தடை விதிக்கப்பட்டது.  இந்த வழக்கு பொறுப்பு தலைமை நீதிபதி டி.ராஜா மற்றும் நீதிபதி பரத சக்ரவர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, அரசு பிளீடர் பி.முத்துக்குமார், ஆணையத்தின் உத்தரவை ரத்து செய்ய வேண்டும் என்றார். மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் நவீன் மூர்த்தி மற்றும் பழனிசாமி ஆகியோரும் அதே கருத்தை வலியுறுத்தினர்.வழக்கை விசாரித்த நீதிபதிகள், ‘‘தேசிய பட்டியலின ஆணையம் தாழ்த்தப்பட்டவர்களுக்கான உரிமைகள் மறுக்கப்படும் வழக்குகளில் மட்டுமே உத்தரவுகளை பிறப்பிக்க முடியும். மாறாக, ஆக்கிரமிப்பு செய்த கோயில் நிலத்தில் இருந்து அகற்ற அறநிலையத்துறை நடவடிக்கை எடுப்பதை எதிர்த்து ஆக்கிரமிப்பாளர் சீனிவாசன் வழக்கு தொடர்ந்துள்ளார். ஆணையம், ஆவணங்களை சரிபார்க்காமல் அவசரமாக உத்தரவு பிறப்பித்துள்ளது.

நிலத்தின் உரிமை மறுக்கப்பட்டதாக தொடரப்பட்ட வழக்கில் ஆணையம் எந்த உத்தரவுகளும் பிறப்பிக்க அதிகாரம் இல்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகளின் விசாரணைக்கு மட்டுமே உத்தரவிட முடியும். மேலும், பட்டியலினத்தவர்களின் உரிமைகள் மறுக்கப்படும்போது மட்டுமே உத்தரவுகள் பிறப்பிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்ற உத்தரவுகள் தெளிவுபடுத்தியுள்ளன. உச்ச நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், தேசிய பட்டியலின ஆணையம் பிறப்பித்த இடைக்கால தடை உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. கோயில் நிலத்தில் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்தவர்களை அப்புறப்படுத்தவும், இந்து சமய அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க அனுமதி அளிக்கப்படுகிறது. ஆவணங்களை மறைத்து வழக்கு தொடர்ந்த சீனிவாசனுக்கு 1000 ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது என்று உத்தரவிட்டு வழக்கை முடித்து’’ வைத்தனர்.

Related Stories: