பாவூர்சத்திரம், நவ. 8: கீழப்பாவூர் பகுதியில் குளங்கள் நிரம்பி மறுகால் பாய்வதால் நெல் நடவு பணி தீவிரமடைந்து உள்ளது. மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதியில் கடந்த வாரம் பெய்த கனமழையால் கீழப்பாவூர் வட்டாரத்தில் உள்ள மேலப்பாவூர், கீழப்பாவூர் பெரியகுளம், அருணாப்பேரி, நாகல்குளம் மற்றும் சாலைப்புதூர் கடம்பன்குளம் உள்ளிட்டவை நிரம்பி மறுகால் பாய்கிறது. இந்த குளங்கள் மூலம் பல ஆயிரக்கணக்கான விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.கீழப்பாவூர் வட்டார வடபகுதி குளங்கள் நிரம்பியதாலும், தொடர்ந்து சாரல் மழை பெய்து வருவதாலும் அதன் மூலம் பாசன வசதி பெறும் கீழப்பாவூர், குறும்பலாப்பேரி, மேலப்பாவூர், வெள்ளகால், ராஜபாண்டி, துவரங்காடு, மகிழ், பெத்தநாடார்பட்டி, சாலைப்புதூர், அடைக்கலப்பட்டினம், நாகல்குளம், சிவகாமிபுரம், மேல பட்டமுடையார்புரம், அருணாப்பேரி மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். வழக்கமாக இப்பகுதியில் ஆண்டுதோறும் நவம்பர் இறுதியில்தான் நெல் நாற்று நடும் பணிகளை துவக்குவர். ஆனால் இந்தாண்டு முறையாக மழை பெய்ததால், தற்போதே நெல் நாற்றுநடும் பணியை துவக்கி உள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், இந்தாண்டு வடகிழக்கு பருவமழை சரியாக பெய்ததால் குளங்கள் அனைத்தும் நிரம்பியது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிது. இந்த வருடம் நெல் மகசூல் நன்றாக இருக்கும் என எதிர்பார்க்கிறோம், என்றனர்.