வத்தலக்குண்டு அருகே மர்ம காய்ச்சலால் 100 பேர் பாதிப்பு

வத்தலக்குண்டு, நவ. 8: வத்தலக்குண்டு அருகே மர்ம காய்ச்சலால் 100க்கும் மேற்பட்டோர் பாதிப்படைந்துள்ளதால் பொதுமக்கள் பீதியடைந்துள்ளனர்.

வத்தலக்கண்டு ஊராட்சி ஒன்றியம், கோம்பைபட்டி ஊராட்சிக்குட்பட்டது மேலக்கோவில்பட்டி அம்பேத்கர் நகர். இங்கு சுமார் 120 வீடுகள் உள்ளன. 500க்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர். இப்பகுதியில் கடந்த சில நாட்களில் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை என 100க்கும் மேற்பட்டோர் மர்மக்காய்ச்சால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து காய்ச்சலால் பாதிக்கப்பட்டு வருவோரின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வந்ததால் பொதுமக்கள் பீதியடைந்தனர். இதுதொடர்பாக விடுதலை சிறுத்தை கட்சி ஒன்றிய செயலாளர் பாக்யராஜ், விஜயகுமார் ஆகியோர் வட்டார வளர்ச்சி அலுவலர் வேதாவிடம் புகார் அளித்தனர்.

இதை தொடர்ந்து வேதா, காய்ச்சல் பாதிக்கப்பட்ட அம்பேத்கர் நகர் பகுதிக்கு உடனடியாக கொசு மருந்து அடிக்க உத்தரவிட்டார். தவிர அங்குள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியை சுத்தப்படுத்தவும் அறிவுறுத்தப்பட்டது. மேலும் வத்தலக்குண்டு சுகாதாரத்துறையினருக்கும் தகவல் கொடுக்கப்பட்டு அவர்கள் முகாமிட்டுள்ளனர். இதுகுறித்து அப்பகுதியை சேர்ந்த சமூகஆர்வலர் தங்கப்பாண்டி கூறுகையில், ‘அம்பேத்கர் நகர் பகுதியில் காய்ச்சல் பாதிப்பிற்கு முக்கிய காரணம் வடிகால் வசதி இல்லாததே ஆகும். கழிவுநீர் தேங்கி கொசுக்கள் பெருகி காய்ச்சலை பரப்பி வருகிறது. எனவே அனைத்து பகுதிகளிலும் உடனடியாக வடிகால் வசதி ஏற்படுத்தி தர வேண்டும். மேலும் இங்குள்ள மேல்நிலை குடிநீர் தொட்டியை மாதம் ஒருமுறையாவது சுத்தம் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றார்.

Related Stories: