2 குழந்தைகள் உட்பட 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் அரசு மருத்துவமனையில் சிகிச்சை

திருப்பூர், நவ.8:திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் 4 பேருக்கு டெங்கு காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. கடந்த சில நாட்களாக திருப்பூர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக மழை பெய்து வருகிறது. இதனால், திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனையில் காய்ச்சலுக்கு சிகிச்சை மேற்கொள்வோர் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.

இந்நிலையில், நேற்றைய நிலவரப்படி முதலிபாளையம், சிட்கோ மீனாட்சிபுரம் 7வயது மற்றும் 8 வயது குழந்தைகள், தாராபுரம் ரோடு புதுக்காடு பகுதியை சேர்ந்த 21 வயது ஆண், சிறுபூலுவப்பட்டியை சேர்ந்த 22 வயது பெண் ஆகிய 4 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்கள் 24 மணி நேரமும் மருத்துவர்களின் தொடர் கண்காணிப்பில் உள்ளனர் என மருத்துவர்கள் தெரிவித்தனர்.

திருப்பூர், மாநகரப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது: திருப்பூர் மாநகரின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து குழந்தைகள், இளைஞர்கள் பல்வேறு மர்ம காய்ச்சலுக்கு பாதிக்கப்பட்டு வருகின்றனர். குடியிருப்பு பகுதிகளில் மழைநீர், சாக்கடை கழிவுகள் தேங்கி நின்றால் மாநகராட்சி அதிகாரிகள் சுத்தம் செய்வதில்லை. இதனால், நாளுக்கு நாள் சுகாதாரா சீர்கேடு அதிகரித்து வருகிறது. எனவே, அனைத்து பகுதிகளிலும் சுகாதார பணிகள் மேற்கொள்ள வேண்டும் என்றனர். திருப்பூர், மாநகராட்சி அதிகாரிகள் கூறுகையில், ‘‘திருப்பூர் மாநகராட்சியில் மொத்தம் 4 மண்டலங்கள் உள்ளன. மண்டலத்திற்கு 125 நபர்கள் வீதம் மொத்தம் 500 நபர்கள் டெங்கு கொசுப்புழு ஒழிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். அனைத்து பகுதிகளிலும் சிறப்பான பணிகள் மேற்கொள்ளப்பட்டு டெங்கு காய்ச்சல் கட்டுப்பாட்டுக்குள் இருக்கிறது,’’ என்றனர்.

Related Stories: