காரியாபட்டி ஜிஹெச்சில் டாக்டர்கள் பற்றாக்குறை

காரியாபட்டி, நவ.7: காரியாபட்டி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் பற்றாக்குறை நிலவுவதால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாமல் சிரமப்பட்டு வருகின்றனர்.  காரியாபட்டி அரசு மருத்துவமனைக்கு சுற்றி உள்ள கிராமங்களிலிருந்து ஏராளமான நோயாளிகள் வந்து செல்கின்றனர். இவர்களுக்கு சிகிச்சை அளிக்க நான்கு டாக்டர்கள் இருந்தனர். இதில் ஒரு டாக்டர் விடுப்பில் உள்ளார். மூன்று டாக்டர்கள் சிகிச்சை அளிக்கின்றனர். டெபுடேசன் அடிப்படையில் பணியாற்றிய இரு டாக்டர்களும் தற்போது வரவில்லை. காலையில் எப்போதும் நோயாளிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும். இவர்களை பரிசோதித்து மருந்து, மாத்திரைகள் கொடுக்க பிற்பகல் 1 மணி ஆகிவிடும். அதற்கு பின் இரு டாக்டர்கள் வீட்டிற்கு சென்று விடுவர். மாலை 5 மணி வரை ஒரு டாக்டர் பணியில் இருப்பார். இது சுழற்சி முறையில் நடப்பது வழக்கம். இரவில் டாக்டர் இருக்கமாட்டார்கள். இங்கு 42 படுக்கைகள் உள்ளன. 50க்கும் மேல் உள்நோயாளிகள் சிகிச்சை பெற்று வருகின்றனர். பலர் தரையில் படுத்துதான் சிகிச்சை பெறுகின்றனர். இவர்களது அவசர சிகிச்சைக்கு செவிலியர்கள்தான் டாக்டர். நோயின் தன்மை தீவிரமாக இருந்தால் அலைபேசி மூலம் டாக்டர்களிடம் தகவல் பெற்று சிகிச்சை அளித்து வருகின்றனர்.

காரியாபட்டி, மதுரை தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் உள்ளது. வாகன போக்குவரத்து அதிகம் என்பதால் அடிக்கடி விபத்து நடக்கிறது. இரவில் விபத்தில் காயமடைந்து வருபவர்களை மதுரை, விருதுநகர் அரசு மருத்துவமனைகளுக்கு அனுப்பி விடுகின்றனர். பெரும்பாலானவர்களை விருதுநகர் மருத்துவமனைக்கு அனுப்புகின்றனர். அங்கும் சிகிச்சை பெற முடியாதவர்களை மதுரைக்கு பரிந்துரைக்கின்றனர். இங்கும் அங்கும் அலைக்கழிப்பதால் நோயாளிகள் உயிரிழக்கும் நிலை ஏற்படுகிறது. எனவே மருத்துவமனையில் கூடுதல் டாக்டர்கள் நியமிக்க வேண்டும் என மக்கள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை. தலைமை மருத்துவர் முருகவேல் கூறுகையில்,  காரியாபட்டி அரசு மருத்துவமனையில் டாக்டர்கள் இருவரும் சுமார் 700 முதல் 800 வெளிநோயாளிகளை கவனிக்க வேண்டும். நான்கு வழி சாலையில் மருத்துவமனை இருப்பதால் விபத்துகளில் அடிபட்டு வரும் நோயாளிகளுக்கும்  இதற்கிடையில் சிகிச்சை அளிக்க  வேண்டும். காரியாபட்டி அரசு மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டு சுமார் 20 வருடங்கள் ஆகியும் நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப  கூடுதல் மருத்துவர்களை நியமிக்க மாவட்ட இணை இயக்குனர் மற்றும் தமிழக அரசுக்கும் ஏற்கனவே  கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. தற்போது காய்ச்சல் சீசன் என்பதால் அதிக அளவில் நோயாளிகள் வருகின்றனர். மருத்துவமனைக்கு  மாற்றுப்பணியில் மருத்துவர்களை நியமிக்க  மாவட்ட  இணை இயக்குனருக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது என்றார்.

Related Stories: