மத்திய சுகாதார காப்பீடு திட்ட காரைக்கால் பயனாளிகளின் பட்டியலை இணையதளத்தில் வெளியிட வேண்டும்

காரைக்கால், நவ. 7: காரைக்காலில் டெங்கு காய்ச்சல் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக திமுக மகளிர் அணி சார்பில் அரசு பள்ளி மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. இதனை முன்னாள் அமைச்சரும், திமுக மாநில அமைப்பாளருமான நாஜிம் வழங்கினார். நிகழ்ச்சியில் மகளிரணி மாவட்ட அமைப்பாளர் வைஜயந்தி ராஜன், துணை அமைப்பாளர்கள் சப்னா மோத்தி, கல்யாணி, உமா உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர். 400 மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது.பின்னர், நாஜிம் நிருபர்களிடம் கூறும்போது, தமிழகத்திலும், புதுச்சேரி மாநிலத்திலும் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இதனால் திமுக தலைவர் ஸ்டாலின் உத்தரவின் பேரில் கட்சி சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டு வருகிறது. அதேபோல் புதுச்சேரி மாநிலத்தின் திமுக மகளிரணி சார்பில் நிலவேம்பு கசாயம் வழங்கப்பட்டது. அது மட்டுமின்றி தற்போது ஆயுஷ்மான் என்ற மத்திய அரசின் சுகாதார காப்பீடு திட்டம் மிகவும் பயன்தரக்கூடிய திட்டமாக நான் கருதுகிறேன். அந்த திட்டத்தின் மூலம் உண்மையான ஏழைகளுக்கு பணம் சேர வேண்டும் என்ற நோக்கத்தில் உறுதியாக இருக்கிறோம். இத்திட்டத்தின் அடிப்படையில் இப்போது யார் தகுதியானவர் என்ற பட்டியல் ஆரம்ப சுகாதார நிலையம், நகர சுகாதார நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வருகின்றன.

இது பற்றி கலெக்டரிடம் பேசியுள்ளேன். இந்த பட்டியலை இணையதளம் மூலமாக தெரியப்படுத்தினால் அனைவருக்கும் பயன்படக்கூடிய வகையில் இருக்கும் என கலெக்டரிடம் தெரிவித்து இருக்கிறேன். 2011ம் ஆண்டில் எடுக்கப்பட்ட கணக்கீட்டின் அடிப்படையில் பார்க்கும்போது தகுதியானவர்கள் பலரும் விடுபடக்கூடிய வாய்ப்பு உள்ளது. தாண்டி இருப்பவர்களும் இப்பட்டியலில் வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான புகாரை யாரிடம் கொடுப்பது என்று தெரியாத நிலை உள்ளது. அதற்கென ஒரு குழுவை கலெக்டர் அமைக்க வேண்டும். தகுதி உள்ளவர்களை விட்டுவிடக் கூடாது என்பதில் கவனம் செலுத்த வேண்டும். ஏழைகளுக்காக உருவாக்கப்பட்ட இத்திட்டம் அவர்களுக்கு முழுமையாக சேர வேண்டும்.சுகாதாரத்தில் மிகவும் பின்தங்கியுள்ள பகுதி காரைக்கால் மாவட்டம் தான். அவர்களுக்கு முன்னுரிமை கொடுக்க வேண்டும். தகுதியுள்ள அனைவரையும் அத்திட்டத்தில் இணைக்க வேண்டும். இத்திட்டம் 100 சதவீதம் வெற்றியை கொண்டுவர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

Related Stories: