கர்நாடகாவிற்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசி பறிமுதல்; டிரைவர் கைது

கிருஷ்ணகிரி, நவ.7:  கிருஷ்ணகிரி வழியாக கர்நாடகாவிற்கு கடத்த முயன்ற 2 டன் ரேஷன் அரிசியை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். மேலும், கடத்தலில் ஈடுபட்ட டிரைவர் கைது செய்யப்பட்டார். கிருஷ்ணகிரி பறக்கும்படை தனி தாசில்தார் பிரதாப், தனி வருவாய் ஆய்வாளர் செல்வம் உள்ளிட்டோர், கிருஷ்ணகிரி டோல்கேட் அருகில் உள்ள முனியப்பன் கோயில் என்ற இடத்தில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தர்மபுரியில் இருந்து பெங்களூரு நோக்கி சென்று கொண்டிருந்த சரக்கு வாகனத்தை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் சிறுசிறு மூட்டைகளாக கட்டி 2 டன் ரேஷன் அரிசியை கடத்திக்கொண்டு பெங்களூரு நோக்கி சென்றது தெரியவந்தது. இதையடுத்து வண்டியை ஓட்டி வந்த தர்மபுரி மாவட்டம் தட்டாராம்பட்டியை சேர்ந்த அஜீத் (21) என்பவரை கைது செய்து, கடத்தலுக்கு பயன்படுத்திய வண்டியை பறிமுதல் செய்தனர். பறிமுதல் செய்யப்பட்ட அரிசியை உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அலுவலகத்தில் ஒப்படைத்து, பின்னர் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக கிடங்கில் ஒப்படைத்தனர்.

Related Stories: