சத்தியமங்கலம் வட்டாரத்தில் அரசுப்பள்ளிக்கு ஆசிரியர் நியமனம்

சத்தியமங்கலம், நவ.7: நடுப்பாளையம் அரசு பள்ளிக்கு ஆசிரியர் நியமிக்கப்பட்டார். சத்தியமங்கலம் வட்டாரத்தில் உள்ள நடுப்பாளையம் அரசு தொடக்கப்பள்ளியில் கடந்த 2018ம் கல்வியாண்டு தொடக்கத்தில் 2 மாணவர்கள் மட்டுமே இருந்ததால் பள்ளி முடப்படும் நிலைக்கு தள்ளப்பட்டது. இதையறிந்த அப்பகுதி பொதுமக்கள் மற்றும் சுடர் அமைப்பினர் இப்பள்ளியில் ஆங்கில வழிக்கல்வி தொடங்கவேண்டும் என கல்வித்துறை அதிகாரிகளிடம் மனு அளித்ததை தொடர்ந்து ஆங்கில வழிக்கல்வி தொடங்கப்பட்டது. இதையடுத்து பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை 30 ஆக உயர்ந்தது. பள்ளியில் ஒரு தலைமை ஆசிரியர் மட்டும் இருந்த நிலையில் கடந்த ஆண்டு ஒரு ஆசிரியர் நியமிக்கப்பட்டார். இந்த கல்வியாண்டில் 12 மாணவர்கள் சேர்ந்ததால் மாணவர்களின் எண்ணிக்கை 42 ஆக உயர்ந்தது.

இப்பள்ளியில் பணியில் இருந்த ஆசிரியர் பணிமாறுதலாகி சென்றதால் அந்த ஆசிரியர் பணியிடத்திற்கு வேறு யாரையும் நியமிக்கவில்லை. இதன்காரணமாக, பள்ளி தலைமை ஆசிரியர் ஒருவரே 42 மாணவ மாணவியருக்கும் கல்வி கற்றுக்கொடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதனால், கற்றல் பணி பாதிக்கப்பட்டதை அறிந்த சுடர் அமைப்பு மற்றும் பள்ளி மேலாண்மைக் குழுவினர் ஆசிரியரை நியமிக்க கோரி தீர்மானம் நிறைவேற்றி தொடக்க கல்வித்துறை அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக, கடந்த 2 நாட்களுக்கு தினகரன் நாளிதழில் செய்தி வெளியானது. இதைத்தொடர்ந்து உக்கரம் அரசு நடுநிலைப்பள்ளியில் பணிபுரிந்து வந்த ஒரு ஆசிரியரை டெப்டேஷன் செய்து  நடுப்பாளையம் அரசு தொடக்கப்பள்ளிக்கு நியமிக்கப்பட்டதால் நேற்று முதல் டென்னிஸ் ஒசாரியோ என்ற ஆசிரியர் பள்ளிக்கு சென்று மாணவ, மாணவியருக்கு கற்பித்தல் பணி மேற்கொண்டார்.

Related Stories: