பாகூர் அருகே குருவிநத்தத்தில் பழங்குடியின மக்கள் வசிப்பிடத்தில் கலெக்டர் திடீர் ஆய்வு

பாகூர், நவ. 6: பாகூர் அடுத்த குருவிநத்தம் புறாந்தொட்டி ஏரிக்கரை பகுதியில் சுமார் 50க்கும் மேற்பட்ட பழங்குடி மக்கள் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் சாலை, குடிநீர் உள்ளிட்ட எந்த அடிப்படை வசதியும் இல்லை. மேலும் இவர்கள் அனைவரும் சிறு அளவிலான குடிசைகளில் வசித்து வருவதால் மழை மற்றும் வெயில் காலங்களில் கடும் அவதி அடைந்து வருகின்றனர். இவர்களின் குடியிருப்புகள் உரிய பாதுகாப்பின்றி உள்ளதால் மக்கள் அச்சத்துடன் வசித்து வருகின்றனர். அருகில் இருந்து பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துகள் வருவதால் அசம்பாவிதம் நடைபெறவும் வாய்ப்பு உள்ளது. விஷ ஜந்துகள் கடித்து இப்பகுதியில் சில குழந்தைகள் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனால் இப்பகுதியில் உள்ளவர்களுக்கு மனைப்பட்டா வழங்கி, வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்து வருகின்றனர். இதனிடையே, கடந்த ஆட்சியின்போது புறாந்தொட்டி பகுதியில் உள்ள பழங்குடியின மக்களுக்கு பட்டா வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. இதை தொடர்ந்து ஒரு சிலருக்கு பட்டா வழங்கப்பட்டது.

இந்நிலையில், நீர்நிலை பகுதியில் பட்டா வழங்கக்கூடாது என கூறி அப்பகுதி விவசாயிகள் பட்டா வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் இவர்களுக்கு பட்டா வழங்கும் நடவடிக்கை நிறுத்தி வைக்கப்பட்டது. இதை தொடர்ந்து பழங்குடியினர் வீடில்லாமல் தொடர்ந்து அவதிப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து அரசுக்கு தொடர்ந்து கோரிக்கை மனு அனுப்பப்பட்டது.  இதையடுத்து மாவட்ட கலெக்டர் அருண் தலைமையிலான வருவாய்த்துறை அதிகாரிகள், ஆதிதிராவிடர் நலத்துறை இயக்குநர் ரகுநாதன் உள்ளிட்ட அதிகாரிகள் நேற்று மதியம் புறாந்தொட்டி பகுதிக்கு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கிருந்த பழங்குடி மக்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். மேலும் இப்பகுதியிலேயே வீடு வேண்டுமா அல்லது வேறொரு பகுதியில் வீட்டுமனை வழங்க நடவடிக்கை எடுக்கலாமா என கேட்டார். அதற்கு பதில் அளித்த பழங்குடியின மக்கள், பல தலைமுறைகளாக நாங்கள் இங்கேயே வாழ்ந்து வருகிறோம். இதனால் இங்கேயே எங்களுக்கு வீடு கட்டித் தர வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதையடுத்து, பழங்குடியின மக்களுக்கு புறாந்தொட்டி பகுதியிலேயே பட்டாவுடன் வீடு கட்டித்தர நடவடிக்கை எடுக்கப்படும், அதுவும் ஒரு வருடத்திற்குள் இதற்குரிய ஏற்பாடு செய்யப்படும் என உறுதியளித்தார்.

Related Stories: