போராட்டம் நடத்த முடிவு தொடர் மழை காரணமாக சாலை பள்ளங்களில் அடிக்கடி சிக்கும் கனரக வாகனங்கள்

ராஜபாளையம், நவ. 5: ராஜபாளையம் நகர் பகுதியில் தொடர் மழை காரணமாக சாலைகளில் பள்ளங்கள் அதிகம் ஏற்பட்டுள்ளது. இதில் அடிக்கடி கனரக வாகனங்கள் சிக்குவதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்படுகிறது. ராஜபாளையம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியில் கடந்த சில தினங்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இதனால் ஆங்காங்கே உள்ள நீர்நிலைகள் நிரம்பி வருகிறது. மேலும் நகர் பகுதியில் மழை பெய்துள்ளதால் சாலைகள் குண்டும், குழியுமாக மாறி போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் உள்ளது. மேலும் சாலைகளில் பாதாள சாக்கடை மற்றும் குடிநீர் குழாய் பதிக்க தோண்டப்பட்ட குழிகள் சரியாக மூடப்படாததால் தற்போது பெய்த மழையால் அந்த குழிகளை கடந்து செல்லும் கனரக வாகனங்கள் அடிக்கடி பள்ளத்தில் சிக்கிக் கொள்கின்றன. இதனால் அப்பகுதியில் கடும் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டு வருகிறது. குறிப்பாக புதிய பேருந்து நிலையம் செல்லும் சாலையில் தினசரி வாகனங்கள் பள்ளங்களில் சிக்கிவிடுகிறது. சங்கரன்கோவில், கோவில்பட்டி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய  பகுதிகளுக்கு கனரக வாகனங்கள் அனைத்தும் இச்சாலையில் தான் சென்று வர  வேண்டும். மாற்றுப்பாதை ஏதும் இல்லாத காரணத்தினால் பல மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்படுகிறது. எனவே சம்மந்தப்பட்ட துறை அதிகாரிகள் சாலையை சீரமைக்க வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: