விருத்தகிரீஸ்வரர் கோயிலில் சூரசம்ஹார நிகழ்ச்சி

விருத்தாசலம், நவ. 5: விருத்தாசலம் விருத்தகிரீஸ்வரர் கோயிலில் கந்த சஷ்டியை முன்னிட்டு சூரசம்ஹார நிகழ்ச்சி நடைபெற்றது. முன்னதாக விருத்தகிரீஸ்வரர் கோயிலில் உள்ள பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனை நடைபெற்றது. விருத்தகிரீஸ்வரர் கோயிலில் வீற்றிருந்த முருகன், வள்ளி தெய்வானை மற்றும் ஆகம சன்னதியில் உள்ள குமரேச சுவாமிகளுக்கு பால், தயிர், பன்னீர், இளநீர், சந்தனம், பஞ்சாமிர்தம், மா பொடி, திரவிய பொடி உள்ளிட்ட அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் மற்றும் சந்தன காப்பு அலங்காரம் நடைபெற்றது. அதனை தொடர்ந்து செங்குந்தர் மடத்திலிருந்து சூரன் அழைப்பு நடைபெற்று, முருகர் உற்சவ சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, விருத்தாம்பிகை அம்மனிடம் சக்திவேல் வாங்கி வரும் நிகழ்ச்சி நடைபெற்றது. பின்னர் கிழக்கு கோபுர வாசலில் சூரனை வதம் செய்யும் சூரசம்ஹார நிகழ்ச்சியில் கஜமுகம், சிங்கமுகசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சியும் நடந்தது. பின்னர் மயில் வாகனத்தில் எழுந்தருளிய முருகர் வீதியுலா தென் கோட்டை வீதி, மேலக்கோட்டை வீதி, வடக்கு கோட்டை வீதி வழியாக சன்னதி தெருவை அடைந்தது. இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட முருக பக்தர்கள் கலந்து கொண்டு அரோகரா கோஷமிட்டு சுவாமி அருளை பெற்றனர்.

Related Stories: