கல்வித்துறை நடவடிக்கைக்கு எதிர்ப்பு பெற்றோர் சாலைமறியல்

புதுச்சேரி, நவ. 5: கதிர்காமம் தில்லையாடி வள்ளியம்மை உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் பெற்றோர் நேற்று திடீர் சாலைமறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. புதுவை கதிர்காமம் தில்லையாடி வள்ளியம்மை அரசு நடுநிலைப்பள்ளி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு உயர்நிலைப்பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. இந்நிலையில் 6ம் வகுப்பில் இருந்து 8ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு இடப்பற்றாக்குறை ஏற்பட்டது. இதையடுத்து அருகில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் கொட்டகை அமைத்து வகுப்பறை தயார் செய்து கொடுக்கப்பட்டது. ஆனால் இந்த வகுப்பறை தற்போது சேதமடைந்த நிலையில் உள்ளதால், அந்த மாணவர்களை இந்திரா நகர் அரசு ஆரம்ப பள்ளி வளாகத்திற்கு மாற்ற புதுச்சேரி அரசு பள்ளி கல்வித்துறை நடவடிக்கை எடுத்தது. அதன்படி நாளை (புதன்கிழமை) இந்திரா நகர் பள்ளிக்கு மாணவர்களை அனுப்பி வைக்கவும் ஆணை பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில் தில்லையாடி வள்ளியம்மை பள்ளி மாணவர்களை சுமார் 1 கிலோமீட்டர் தூரத்திற்கு மேல் உள்ள இந்திரா நகர் பள்ளிக்கு அனுப்பினால் மாணவர்கள் மட்டுமின்றி, பெற்றோருக்கும் அலைச்சல் ஏற்படும். இதனால் மாணவர்களின் கல்வி பாதிக்கப்படும். எனவே அரசு பெண்கள் பள்ளி வளாகத்தில் போதிய இடவசதி இருப்பதால் அங்கேயே மாணவர்களுக்கு வகுப்பறை அமைக்க வேண்டும் என கூறி மாணவர்களின் பெற்ேறார் நேற்று மாலை புதுச்சேரி-வழுதாவூர் சாலையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். சுமார் அரை மணிநேரத்திற்கு மேலாக போராட்டம் நீடித்ததால் அப்பகுதியில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதையடுத்து காங்கிரஸ் சிறப்பு அழைப்பாளர் ரமேஷ், பள்ளி தலைமை ஆசிரியர் அருணாச்சலம், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் சண்முகம், துணைத்தலைவர் அமரன் மற்றும் நிர்வாகிகள் சம்பவ இடத்திற்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது இப்பிரச்னை குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதனையேற்று பெற்றோர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர். இதையடுத்து பெற்றோர் ஆசிரியர் சங்க நிர்வாகிகள் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் ருத்ரகவுடுவை சந்தித்து இதுகுறித்து பேசினர். அப்போது தற்காலிகமாக இப்பிரச்னைக்கு தீர்வாக ஷிப்டு முறையில் வகுப்புகள் நடத்த முடிவு செய்ததாக கூறப்படுகிறது.

Related Stories: