ரயில்வே வேலை என 19 பேருக்கு போலி உத்தரவு வழங்கி லட்சக்கணக்கில் மோசடி பட்டதாரி வாலிபர்கள் இருவர் கைது

திருச்சி, நவ.5: ரயில்வே பணியில் சேர 19 பேருக்கு போலி நியமன ஆர்டர் வழங்கி பல லட்சம் ரூபாயை சுருட்டிய என்ஜினியரிங் பட்டதாரி உள்பட 2 பேரை போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து பல ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்ட ரயில்வே அதிகாரிகளுக்கான பயிற்சி இன்ஸ்டிடியூட் திருச்சியில் செயல்படுகிறது. இதன் அதிகாரியாக இருப்பர் டிடுஸ் மணிவண்ணன். கடந்த சில தினங்களுக்கு முன் நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை சேர்ந்த கவுரீஸ்வரன் என்பவர் திருச்சியில் உள்ள ரயில்வே பயிற்சி அலுவலகத்துக்கு வந்து பயிற்சி பெறுவதற்கான தனக்கான வேலை உத்தரவு நகலை வழங்கினார்.அதை வாங்கி பார்த்த இன்ஸ்டிடியூட் அதிகாரி மணிவண்ணன், அது போலியானது என்பதை தெரிந்து கொண்டு அவரிடம் விசாரித்தார். அப்போது, சேந்தமங்கலத்தை சேர்ந்த இன்ஜினீயரிங் பட்டதாரி சதீஷ் என்பவரிடம் வேலை வாங்கி தரும்படி ரூ.2 லட்சம் கொடுத்தேன். அவர் தான் வேலைக்கான ஆர்டர் வந்து விடும் என கூறினார். அவர் கூறிய 2 நாளில் தபாலில் ஆர்டர் வந்தது என கூறி உள்ளார்.

இது குறித்து மணிவண்ணன், திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜிடம் புகார் செய்தார். இந்த புகாரை மாநகர குற்றப்பிரிவுக்கு கமிஷனர் அனுப்பி விசாரிக்க உத்தரவிட்டார். இன்ஸ்பெக்டர் காவேரி தீவிர விசாரணை மேற்கொண்டார். விசாரணையில் தெரியவந்த திடுக்கிடும் வருமாறு: நாமக்கல் மாவட்டம் சேந்தமங்கலத்தை சேர்ந்த பிடெக் பட்டதாரியான சதீஷ் (27) வேலை இல்லாமல் ஊர் சுற்றி வந்து உள்ளார். அவர் தனது தந்தையிடமே ரயில்வேயில் பெரிய அதிகாரியாக இருப்பதாக கூறி உள்ளார். இதை அக்கம் பக்கத்தினரும் நம்பி அவரிடம் ரயில்வேயில் வேலை வாங்கி தரும்படி பலர் பணம் கொடுத்து உள்ளனர்.இதில் 19 பேரிடம் ரூ.20 லட்சத்துக்கும் மேலாக பணத்தை பெற்றுக்கொண்டு போலி ஆர்டர்கள் வழங்கி உள்ளார். அதே பகுதியை சேர்ந்த சீனிவாசன் (35) என்பவருக்கு ரயில்வே பீல்டு ஆபீசர் பணி வழங்கி ஆர்டர் கொடுத்து உள்ளார். மேலும் அவரை ஒவ்வொரு ஊராக அனுப்பி இளைஞர்கள் யார், யார் வேலை இல்லாமல் இருக்கிறார்கள், யார் யாரிடம் பணம் வாங்க முடியும் என விசாரித்து வரும் பணியை செய்ய சொல்லி உள்ளார். அவரும் தனக்கு ரயில்வேயில் வேலை கிடைத்து விட்டதாக சந்தோசத்தில் பட்டதாரியான சீனிவாசன் பீல்டு ஆபீசர் பணியை செய்ய துவங்கினார். இவர் சதீசுக்கு உறுதுணையாக இருந்ததால் போலீசார் கைது செய்தனர்.இவர்கள் இருவரும் அந்த பகுதியில் உள்ள ஒரு கம்ப்யூட்டர் சென்டரில் இருந்து தான் இதற்கான போலி ஆர்டர்கள் தயாரித்து அனுப்பி உள்ளனர். இது தொடர்பாக ஏராளமான ஆவணங்களை போலீசார் கைப்பற்றி உள்ளனர். இது தொடர்பாக மேலும் விசாரணை நடந்து வருகிறது. நேற்று முன்தினம் கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related Stories: