ஜவுளி பூங்கா திட்டத்தை கிடப்பில் போட்டதை கண்டித்து உண்ணாவிரதம்

பாடாலூர், நவ 5: பெரம்பலூர்கலெக்டர் நிர்வாகத்தின் மாற்று கருத்தினால் கிடப்பில் போடப்பட்டுள்ள ஜவுளி பூங்காவினை செயல்படுத்த கோரி, ஜவுளி பூங்கா இடத்திற்கு செல்லும் சாலையில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. கடந்த 2013 ஆம் ஆண்டில் சென்னை தலைமை செயலகத்தில் நடந்த மாவட்ட கலெக்டர்கள் மாநாட்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் புதியதாக ஜவுளி பூங்கா செயல்படுத்தபடும் என மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அறிவித்தார். இதனை தொடர்ந்து பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றிய்ம், பாடாலூர் மற்றும் இரூர் ஊராட்சியில் உள்ள 40.7 ஹெக்டேர்(100 ஏக்கர்) நிலம் தேர்வு செய்யபட்டு கிராம சபை தீர்மானம் செய்து தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் வசம் நிலம் ஒப்படைக்கபட்டது. இதனை தொடர்ந்து கலெக்டர் தலைமையில், சார் ஆட்சியர், மாவட்ட வருவாய் அலுவலர், ஊராட்சி உதவி இயக்குநர், செயற்பொறியாளர், ஆலத்தூர் வட்டார வட்டாட்சியர், வட்டார வளர்ச்சி அலுவலர், புதுவாழ்வு திட்ட இயக்குநர், பாடாலூர் மற்றும் இரூர் ஊராட்சி மன்ற தலைவர்கள் கலந்து கொண்ட ஆய்வு கூட்டம் நடத்தபட்டது. இதில் ஜவுளி பூங்கா திட்டம் செயல்பட ஆக்கபூர்வமான ஆலோசனைகள் வழங்கப்பட்டது . இதில் இந்த ஜவுளி பூங்காவில் ஜவுளி தொழில் செய்யதிட 20 பேர் வரை விருப்ப மனு கொடுத்தனர். தொடந்து அந்த தொழில் முனைவோர்கள் ஜவுளி பூங்கா இடத்தை சமன் செய்து, அணுகு சாலையை தார்சாலையாக மேம்பாடு செய்து தருமாறு கேட்டு கொண்டனர்.

தொடர்ந்து இடத்தை சமன் செய்வதற்காக திட்ட மதிப்பீடு தயார் செய்யபட்டது. ஜவுளி பூங்கா சாலையை தார் சாலையாக மேம்பாடு செய்திட மதிப்பீடு செய்யபட்டு பணிகள் தொடங்கப்பட்டது. இந்நிலையில் அப்போது இருந்த தமிழக முதல்வர் ஜெயலலிதா மறைவுக்கு பின்னர் புதியதாக வந்த பெரம்பலூர் கலெக்டர் திட்டத்தை செயல்படுத்த எந்தவித நடவடிக்கையும் எடுக்காமல் கிடப்பில் போட்டு விட்டதாக கூறப்படுகிறது. இதனால் மாவட்ட கலெக்டர் நிர்வாகத்தை கண்டித்து உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில் அ.தி.மு.க இளைஞரணி தலைவர் ஸ்டாலின், பொருளாளர் வேல்முருகன், மாவட்ட மகளிரணி தலைவி வெள்ளையம்மாள்,தமிழக விவசாயிகள் சங்க மாநிலத் தலைவர் ராஜாசிதம்பரம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். இதுகுறித்து தகவலறிந்த பெரம்பலூர் டிஎஸ்பி கென்னடி சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததன் பேரில் உண்ணா விரதத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

Related Stories: