சிவன்மலையில் கந்தர் சஷ்டி நிறைவு சாமி மீண்டும் மலையை அடைந்தார்

காங்கயம்,நவ.5:சிவன்மலை சுப்பிரமணிய சுவாமி கோயில் கந்த சஷ்டி சூரசம்ஹார விழாவை அடுத்து நேற்று சாமி திருமலையை அடைந்தார்.

திருப்பூர் மாவட்டம் காங்கயம் அருகே சிவன்மலையில் உள்ள சுப்பிரமணிசாமி கோயிலில் கந்தசஷ்டி சூரசம்ஹார திருவிழா கடந்த 28ம் தேதி துவங்கியது. அன்று மதியம் சாமி மலை அடிவாரத்தில் உள்ள நஞ்சுண்டேஸ்வரர்சாமி கோயிலுக்கு எழுந்தருளுளினார். இதைத்தொடர்ந்து ஏராளமான பக்தர்கள் காப்பு கட்டி விரதம் தொடங்கினார்கள். தினமும் காலை 10 மணிக்கும் மாலை 4 மணிக்கும் அபிஷேக ஆராதனையும், திருவுலகாட்சியும் நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான சூரசம்ஹாரவிழா 2ம் தேதி மாலை துவங்கியது. மலை அடிவாரத்தில் உள்ளபாத விநாயகர் கோயிலில் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது தொடர்ந்து பல்லக்கில் முருகப்பெருமானுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு இரவு 7.20 மணியளவில் சுப்பிரமணியர் போருக்கு புறப்பட்டார். தொடர்ந்து அடிவாரத்தில் உள்ள நான்கு வீதிகளிலும் போரிட்டு சூர பத்மனின் தலையை கொய்தார். அப்போது ஏராளமானபகதர்கள் கூடி நின்று அரோகரா கோஷம் போட்டனர்.

நேற்று முன்தினம் இரவு 7.15 மணிக்கு முருகப்பெருமான், தெய்வானை திருக்கல்யாண உற்சவம் நடைபெற்றது. இதில் 1000த்திற்கும் மேற்பட்டோர் பக்தர்கள் கலந்து கொண்டனர். பின்னர் நான்கு வீதிகளில் திருவுலாக்காட்சி நடைபெற்றது. பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். சஷ்டி விரதம் இருந்தவர்கள் நேற்று சிறப்பு பூஜையில் கலந்து கொண்டு விரதத்தை நிறைவு செய்தனர். விழா நிறைவு நாளான நேற்று மஞ்சள் நீராட்டு உற்சவமும், சாமி திருமலைக்கு எழுந்தருளல், பாலிகை நீர்த்துறை சேர்த்தல் நடைபெற்றதையடுத்து கந்தர் சஷ்டி விழா நிறைவு பெற்றது. விழாவுக்கான ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர், செயல் அலுவலர் மற்றும் பணியாளர்கள் செய்திருந்தனர்.

Related Stories: