பாகூரில் 6 ஏரிகள் நிரம்பின

பாகூர், நவ. 1: பாகூரில் நேற்று முன்தினம் 9 செமீ மழை பதிவாகியுள்ளது. தொடர் மழையால் 6 ஏரிகள் நிரம்பியுள்ளன. கடந்த 17ம் தேதி வடகிழக்கு பருவமழை தொடங்கியது. அன்று முதல் தமிழகம், புதுச்சேரியில் பரலாக மழை பெய்து வருகிறது. கடந்த 3 தினங்களாக மழை தீவிரம் அடைந்துள்ளது. பாகூரில் நேற்று முன்தினம் 9 செ.மீ மழை பதிவாகியது.  இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி நிற்கிறது. பாகூர் பகுதியில் மொத்தம் 24 ஏரிகள் உள்ளன. இதில் 6 ஏரிகள் நிரம்பியுள்ளன. சில ஏரிகளுக்கு செல்லும் கிளை வாய்க்கால்கள் தூர் வாரப்படாததால், ஏரிக்கு வரும் தண்ணீர்  தடுக்கப்பட்டு ஆங்காங்கே தேங்கி நிற்கிறது. புதுச்சேரியின் மிகப்பெரிய ஏரிகளில் ஒன்றான பாகூர் ஏரி 3.5 மீட்டர் ஆழமுடையது. இதில் தற்போது 1.25 மீட்டர் அளவுக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. மழை காரணமாக பாகூர் வருவாய் கிராமத்தில் 4 வீடுகள் இடிந்து விழுந்தன. நெட்டப்பாக்கம் பகுதியில் 3 வீடும், கிருமாம்பாக்கம் பகுதியில் ஒரு வீடும் இடிந்து விழுந்தது. பாகூர் வருவாய்த்துறையினர் அவற்றை ஆய்வு செய்தனர்.  இதற்கிடையே தாழ்வான பகுதிகளில் தேங்கி நிற்கும் மழைநீரை வெளியேற்ற அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

Related Stories: