தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீர் அகற்றம்

புதுச்சேரி, நவ. 1:  சென்னை வானிலை ஆய்வு மைய எச்சரிக்கை காரணமாக புதுவையில் 2வது நாளாக மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. இதனிடையே தாழ்வான பகுதிகளில் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டன. குண்டும் குழியுமான  சாலைகளை செப்பனிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. புதுவையில் 2 வாரமாக விட்டுவிட்டு சாரல் மழை பெய்த நிலையில் கடந்த 2 நாட்களாக பலத்த மழை பெய்தது. புயல் எச்சரிக்கை காரணமாக அரசு, தனியார் பள்ளிகளுக்கு நேற்று விடுமுறை விடப்பட்டன. இதனிடையே வானிலை ஆய்வு  மையம் எச்சரிக்கை காரணமாக புதுவையில் மீனவர்கள் 2வது நாளாக நேற்றும் கடலுக்கு செல்லவில்லை. இதனிடையே புதுவையில் ஆங்காங்கே சாலைகள் குண்டும் குழியுமாக சேதமடைந்து கிடந்த நிலையில் பொதுமக்கள் வாகனங்களை ஓட்ட முடியாமல் சிரமத்திற்குள்ளாகினர். நேற்று மழை சற்று ஓய்ந்த நிலையில் கான்கிரீட் கலவை கொண்டு  சாலையில் உள்ள பள்ளங்களை சரிசெய்யும் பணியில் பொதுப்பணித்துறை, நகராட்சி அதிகாரிகள் முழுவீச்சில் ஈடுபட்டனர். 100 அடி ரோடு, முதலியார்பேட்டை, விழுப்புரம் சாலை, கடலூர் சாலை என அனைத்து பகுதிகளிலும் ரோடுகளை  செப்பனிடும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.  மேலும் ஆங்காங்கே தாழ்வான பகுதிகளில் மழைநீர் குட்டைபோல் தேங்கி நின்ற நிலையில் குடியிருப்பு பகுதிக்குள் புகும் நிலையில் இருந்த தண்ணீரை மோட்டார் இயந்திரம் மூலம் அகற்றும் பணியில் நகராட்சி, கொம்யூன் பஞ்சாயத்து  ஊழியர்கள் ஈடுபட்டனர். தொடர் மழை காரணமாக பாரதி பூங்கா, கடற்கரை சாலை, படகு குழாம், ஊசுட்டேரி உள்ளிட்ட சுற்றுலா பகுதிகளில் வெறிச்சோடி கிடந்த நிலையில் நேற்று மக்கள் நடமாட்டத்தை அப்பகுதிகளில் காணமுடிந்தது.

Related Stories: