ஆழ்குழாய் கிணறு மூடாமல் இருந்தால் தகவல் தெரிவிக்கலாம் நகராட்சி ஆணையர் வேண்டுகோள்

பெரம்பலூர், அக். 31: பெரம்பலூர் நகராட்சியில் தண்ணீரின்றி மூடப்படாத நிலையில் உள்ள ஆழ்குழாய் கிணறு இருந்தால் உடனடியாக தகவல் தெரிவிக்க வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் நகராட்சி ஆணையர் (பொ) ராதா தெரிவித்திருப்பதாவது: பெரம்பலூர் நகராட்சி இரண்டாம் நிலை அந்தஸ்து கொண்ட நகராட்சியாகும். இங்குள்ள பெரம்பலூர், துறைமங்கலம், அரணாரை ஆகிய 3 பகுதியில் உள்ள 21 வார்டுகளில் மொத்தம் 14,700 வீடுகள் உள்ளன. பெரம்பலூர் நகராட்சியில் 2011ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 49,468 பேர் இருந்தனர். தற்போது 65 ஆயிரம் பேர் வசித்து வருகின்றனர். உச்சநீதிமன்ற அறிவுறுத்தலின் பேரில் தமிழக அரசு தண்ணீரின்றி மூடப்படாமல் இருக்கும் ஆழ்குழாய் கிணறுகளை மூடுவதற்கு உத்தரவு பிறப்பித்துள்ளது. இதன்படி பெரம்பலூர் நகராட்சியில் குடிநீர் விநியோகிக்கும் பணியாளர்கள் மூலம் ஆழ்குழாய் கிணறுகள் மூடப்படாமல் இருப்பவை குறித்து கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.

அதன்பேரில் அரசுக்கு சொந்தமான ஆழ்குழாய் கிணறுகளாக இருந்தால் நகராட்சி சார்பில் உடனே மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் நிலங்களில் மூடப்படாத ஆழ்துளை கிணறுகள் இருந்தாலும் அவை கண்டறியப்பட்டு உடனே மூடுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் புதிதாக ஆழ்குழாய் கிணறுகள் யாராவது அமைப்பதாக இருந்தால் அவை நகராட்சி நிர்வாகத்தால் தடுத்து நிறுத்தப்பட்டு முறையான அனுமதி பெறப்பட்டு உள்ளதா என்பதை விசாரணை செய்து பிறகு ஆழ்குழாய் கிணறுகள் அமைக்கப்பட்டாலும் அவை பாதுகாப்புடன் உள்ளதா என்பதை ஆய்வு செய்து பின்னரே பயன்படுத்த அனுமதிக்கப்படும். எனவே பெரம்பலூர் நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் வசிக்கும் பொதுமக்கள், வர்த்தக நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள் தங்கள் வீடுகளில், வளாகங்களில் உள்ள மூடப்படாத ஆழ்குழாய் கிணறுகளை விரைந்து மூட வேண்டும். அதற்கான ஆலோசனைகள் தேவைப்பட்டாலும் நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டு தெரிந்து கொள்ள அறிவுறுத்தப்படுகிறது. இதில் யாரும் மெத்தனமாக செயல்படாமல் அரசின் உத்தரவுகளை நிறைவேற்ற அனைத்து தரப்பினரும் முழுமையாக ஒத்துழைப்பு வழங்க வேண்டும். இவ்வாறு நகராட்சி ஆணையர் (பொ) ராதா வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவித்துள்ளார்.

Related Stories: