மருதமலை, பேரூர் கோயில்களின் வெப்சைட் முடக்கம்

கோவை, அக். 31:  கோவை மருதமலை, பேரூர், கோனியம்மன் கோயில்களின் இணையதளம் பக்கம் முறையாக பராமரிக்காமல் அப்டேட் செய்யாமல் முடங்கி உள்ளது. இதனால், பக்தர்கள், சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டு வருகின்றனர்.

கோவை மாவட்டத்தில் உள்ள முக்கிய கோயில்களில் மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயில், பேரூர் பட்டீஸ்வரர் கோயில், கோனியம்மன் கோயில்கள் உள்ளது. இவை இந்துசமய அறநிலையத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் செயல்பட்டு வருகிறது. இந்த கோயில்கள் அனைத்தும் வரலாற்று சிறப்பு மிக்கது. இதில், பேரூர் பட்டீஸ்வரர் கோயில் கி.பி.650க்கு முன்பு கட்டப்பட்டது. சிவன் கோயில் என்றாலும் வைணவம் சிற்பங்களும் கோயிலில் இடம் பெற்றுள்ளது. தவிர, ஏராளமான கல்வெட்டுகள் இருக்கிறது. இதே போல் மருதமலை சுப்பிரமணியசுவாமி கோயில் முருகபெருமானின் ஏழாவது படைவீடாக கருதப்படுகிறது. 12ம் நூற்றாண்டை சேர்ந்தது. 18 சித்தர்களின் ஒருவரான பாம்பாட்டி சித்தர் இங்குள்ள குகையில் சில காலம் வசித்து வந்துள்ளதாக வரலாறுகள் கூறுகிறது.

கோனியம்மன் கோவையின் காவல் தெய்வமாக கருதப்படுகிறார். இக்கோயில் கி.பி.16ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. இதன் காரணமாக கோவைக்கு வரும் வெளிநாடு, வெளிமாநில சுற்றுலா பயணிகள் அதிகளவில் இந்த மூன்று கோயில்களுக்கு செல்கின்றனர். மேலும், உள்ளூர் பக்தர்களும், வெளிமாவட்ட பக்தர்களும் தினமும் கோயில்களுக்கு வந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்நிலையில், சுற்றுலா பயணிகள் மற்றும் பக்தர்கள் கோயில்கள் குறித்த வரலாறு, தகவல்கள், பூஜை நேரம், பூஜைக்கான டிக்கெட், பேருந்து வசதி, விழாக்காலங்கள் உள்ளிட்ட அனைத்து தகவல்களையும் எளிதாக தெரிந்து கொள்ள அறநிலைத்துறையின் சார்பில் இந்த கோயில்களுக்கு என தனித்தனியாக இணையதளம் பக்கம் துவங்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. இந்த வெப்சைட் கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக அப்டேட் செய்யப்படாமல் முடங்கியுள்ளது. கோயில் நிர்வாகத்தின் சார்பில் கோயில்களில் நடக்கும் விழாக்கள், சிறப்பு பூஜைகள் குறித்த எந்த தகவல்களையும் கோயில் இணையதளம் பக்கத்தில் பதிவேற்றம் செய்யவில்லை. கடந்த 2017, 2018ம் ஆண்டுகளில் நடந்த பூஜைகள், விழாக்கள் குறித்த தகவல்கள் மட்டுமே இணையதளம் பக்கத்தில் உள்ளது. மருதமலை கோயிலில் தற்போது சஷ்டி விழா துவங்கி நடந்து வருகிறது. ஆனால், கோயில் இணையதள பக்கத்தில் இது குறித்த தகவல்கள் இல்லை. மேலும், கோயிலுக்கு செல்லும் பேருந்துகள் குறித்த தகவல்களும் அப்டேட் செய்யாமல் இருக்கிறது. இதனால், கோயில் இணையதளம் பக்கத்தை பயன்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பக்தர்கள், சுற்றுலா பயணிகள் கோயில்களில் நடக்கும் விழாக்கள் குறித்த தகவல் தெரிந்து கொள்ள முடியாத நிலையுள்ளது.

உடனடியாக, கோயில்களின் இணையதள பக்கங்களை அப்டேட் செய்ய வேண்டும் என பக்தர்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அறநிலையத்துறை அதிகாரிகள் கூறுகையில், “கோயில்களின் இணையதளத்தை சம்மந்தப்பட்ட கோயில்களின் செயல் அலுவலர்கள் நிர்வகிக்க வேண்டும். இதில், கோயில்களில் நடந்த மற்றும் நடக்கவுள்ள பூஜைகள் குறித்த தகவல்களை இடம் பெற செய்ய வேண்டும். தற்போது எழுந்துள்ள புகார்கள் சரிசெய்யப்படும். இணையதளத்தில் முறையாக கோயில்களின் தகவல்கள் பதிவேற்றம் செய்ய அறிவுறுத்தப்படும்” என்றனர்.

Related Stories: