உச்சத்தில் ஆம்னி பேருந்து கட்டணம் சுரண்டை-சென்னைக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்கப்படுமா?

சுரண்டை, அக். 25:  தீபாவளி பண்டிகையை முன்னிட்டு ஆம்னி பேருந்து கட்டணம் பல மடங்கு உயர்ந்துள்ளதால் சுரண்டையில் இருந்து சென்னை, கோவை இடையே அரசு சிறப்பு பஸ்களை இயக்க கோரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.  சுரண்டை மற்றும் சுற்றுவட்டார நூற்றுக்கணக்கான கிராமங்களை சேர்ந்த ஏராளமானோர், வேலை நிமித்தமாக சென்னை, கோவை, ஈரோடு போன்ற பகுதிகளில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இவர்கள், தீபாவளி, பொங்கல் பண்டிகை மற்றும் கோயில் கொடை விழாக்களுக்கு குடும்பத்தினருடன் ஊருக்கு வருவது வழக்கம்.

இந்தாண்டு தீபாவளிக்கு இரு நாட்களே உள்ள நிலையில், அனைத்து அரசு பஸ்களிலும் முன்பதிவு முடிந்துள்ளது. சிறப்பு பஸ்களிலும் ‘சீட்’ கிடைப்பது அரிதாகிவிட்டது. இதனால் ஆம்னி பேருந்துகளின் கட்டணம் பல மடங்கு உயர்த்தப்பட்டு உள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. குறிப்பாக சென்னையில் சுரண்டைக்கு ரூ.1500 முதல் 2000 வரை டிக்கெட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. சுரண்டையில் இருந்து சென்னைக்கு மட்டும் 15க்கும் மேற்பட்ட ஆம்னி பஸ்கள் இயக்கப்படுகிறது. ஆனால் அரசு பஸ் வசதியில்லை. கடந்தாண்டு தீபாவளி நேரத்தில் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. இந்தாண்டு இதுவரை சுரண்டையில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுவதற்கான அறிவிப்புகள் எதுவும் வெளியிடப்படவில்லை. எனவே ஏழை எளிய மக்களின் நலனை கருத்தில் கொண்டு சென்னை மற்றும் கோவைக்கு அரசு சிறப்பு பஸ்கள் இயக்க வேண்டும் என இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: