அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் கோயில் கந்தசஷ்டி சூரசம்ஹார விழா முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி

குளித்தலை, அக். 25: கரூர் மாவட்டம் குளித்தலை அடுத்த அய்யர் மலையில் சிவ தலங்களில் பிரசித்தி பெற்ற ரத்தினகிரீஸ்வரர் திருக்கோயில் உள்ளது. இக்கோயில் 1017 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இக்கோயிலில் கார்த்திகை மாதம் சோம வாரம், சித்திரை மாதம் சித்திரை திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறும். சிறப்பு வாய்ந்த இக்கோயிலில் அய்யர்மலை சூரசம்ஹார விழா அறக்கட்டளை சார்பில் இரண்டாம் ஆண்டு கந்த சஷ்டி சூரசம்ஹார பெருவிழா ஒரு வாரம் நடைபெறுகிறது.

விழாவினை ஒட்டி நேற்று காலை மூர்த்தி கால் போடும் நிகழ்ச்சி நடைபெற்றது. வரும் 27ம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) ரத்தினகிரீஸ்வரர் மலை உச்சியிலிருந்து வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமி கீழே எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறும். அதனை தொடர்ந்து முக்கிய விழாவாக ஆறாம் நாளான நவம்பர் 2ம் தேதி சனிக்கிழமை மதியம் உற்சவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை நடைபெற்று மாலை 4 மணிக்கு சாமி புறப்பாடும், அதனை தொடர்ந்து முருகப் பெருமான் அன்னையிடம் சக்தி வேல் வாங்கும் நிகழ்ச்சியும் நடைபெறுகிறது.

மாலை 6 மணிக்கு கஜமுகாசுரன் சிங்கமுகாசுரன் பானுகோபன் சூரபத்மன் சூரசம்ஹார பெருவிழா நடைபெற்று வாணவேடிக்கை நடைபெறுகிறது. மூன்றாம் தேதி(ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு மகா அபிஷேகம் நடைபெற்று 9 மணிக்கு மேல் வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணிய சுவாமிக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெறுகிறது. இறுதியாக திருக்கல்யாண விருந்து நடைபெற்று மாலை சாமி புறப்பாடு நடைபெறும். இவ்விழாவில் சுற்றுவட்டாரத்தில் இருந்து ஏராளமானோர் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

Related Stories: