விவசாய தொழிலாளர் நலச்சங்கத்தை செயல்படுத்தி ₹2 ஆயிரம் போனஸ்

புதுச்சேரி, அக். 24:      புதுச்சேரி விவசாய தொழிலாளர் சங்க பொதுச்செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கை: புதுச்சேரி மாநிலத்தில் விவசாய தொழிலாளர்கள் பல்லாயிரம் பேர் வாழ்ந்து வருகின்றனர். விவசாய கூலி வேலையை நம்பி வாழும் தொழிலாளர்களுக்கு அதிக அளவில் வேலை கிடைப்பதில்லை. பலகட்ட போராட்டங்களுக்குப் பிறகு விவசாய தொழிலாளர்களின் நலன் கருதி, புதுச்சேரி அரசால் விவசாய தொழிலாளர் நலச்சங்கம் உருவாக்கப்பட்டது. ஆரம்பத்தில் 30 ஆயிரம் தொழிலாளர்களை இனம் கண்டு அடையாள அட்டை, மழைக்கோட்டு, கொசுவலை வழங்கப்பட்டது. அதன்பிறகு நலச்சங்கம் செயல்படவில்லை.ஏழை மக்களுக்கு வழங்க வேண்டிய இலவச அரிசி, இலவச வேட்டி சேலை வழங்கவில்லை. முதல்வர், வேளாண் துறை அமைச்சர் மற்றும் அதிகாரிகளை சந்தித்து மனு கொடுத்து பேச்சுவார்த்தை நடத்தினோம். நலச்சங்கத்தை செயல்படுத்துவதாக உறுதி அளித்தனர். ஆனாலும் நலச்சங்கம் செயல்படவில்லை. எனவே, தொழிலாளர்களின் ஏழ்மை நிலையை கருத்தில் கொண்டு நலச்சங்கத்தை செயல்படுத்துவதுடன் எதிர்வரும் தீபாவளிக்கு போனசாக மற்ற வாரியங்களை போன்று ரூ.2 ஆயிரம் வழங்க வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: