தைராய்டு பிரச்னைக்கு அயோடின் குறைபாடுதான் காரணம்

புதுச்சேரி, அக். 23: புதுச்சேரி அரசு நலவழித்துறையின் ஊட்டச்சத்து பிரிவு சார்பில் குயவர்பாளையம் நகர ஆரம்ப சுகாதார நிலையம் மூலம் உலக அயோடின் குறைபாடு தினத்தை முன்னிட்டு அயோடின் சத்துக்கள் நிறைந்த உணவு பொருட்களை கொண்டு விழிப்புணர்வு சீர்வரிசை பேரணி நேற்று நடந்தது. மருத்துவ அதிகாரி அஜ்மல் அஹமத் தலைமை தாங்கினார். ஓமியோபதி மருத்துவர் உசஸ், சுகாதார ஆய்வாளர் யசோதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். பேரணி மற்றும் கண்காட்சியை ஊட்டச்சத்து துணை இயக்குநர் ஆனந்தன் துவக்கி வைத்தார்.பேரணியில் தனியார் பாராமெடிக்கல் கல்லூரி மாணவ. மாணவிகள் அயோடின் ஊட்டச்சத்து நிறைந்துள்ள முட்டை, பால், மீன், கீரை, பழம், காய்கறிகளை எடுத்துக் கொண்டு சீர்வரிசைகளுடன் குயவர்பாளையம் ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு உட்பட்ட பகுதிகளில் நடந்து சென்று பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.

Advertising
Advertising

இது குறித்து துணை இயக்குநர் ஆனந்தன் கூறுகையில், ஒவ்வொரு வருடமும் அக்டோபர் மாதம் 21ம் தேதி உலகம் முழுவதும் அயோடின் குறைபாடு தினம் அனுசரிக்கப்படுகிறது. அயோடின் என்பது உடலுக்கு தேவைப்படும் மிக முக்கியமான ஒரு மினரல் ஆகும். அயோடின் குறைபாட்டால் தைராக்ஸின் ஹார்மோன் சுரப்பியில் பாதிப்பு உண்டாக்கி தைராய்டு உண்டாக காரணமாக அமைந்து விடுகிறது. அயோடின் குறைபாடு உடலின் உயரம் மற்றும் பருமனை நிர்ணயிக்கிறது. மேலும் குழந்தைகளின் உடல் வளர்ச்சி, மூளை வளர்ச்சியில் அயோடின் பெரும் பங்கு வகிக்கிறது. அயோடின் சத்து குறைபாட்டினால் குழந்தைகளுக்கு படிப்பில் நாட்டம் இன்றி மந்தநிலை ஏற்படுகிறது. மேலும் கருவுற்ற தாய்மார்களுக்கு தொடர் கருச்சிதைவு, குழந்தையின்மை, கருவில் சிசுவின் மூளை, கண், காது பாதிப்பு ஏற்படுத்தி குழந்தைகள் நிரந்தர ஊனமாக பிறக்கின்றனர். எனவே, அனைவரும் அயோடின் கலந்த உப்பை மட்டுமே வாங்கி பயன்படுத்த வேண்டும். அயோடின் சத்துக்கள் நிறைந்த உணவை உண்ண வேண்டும், என்றார்.ஏற்பாடுகளை சுகாதார உதவி ஆய்வாளர் அய்யனார் தலைமையில் சுகாதார உதவி ஆய்வாளர்கள் வெங்கட்ராமன், தாமோதரன் மற்றும் கிராம துணை செவிலியர்கள் செந்திருந்தனர்.

Related Stories: