காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தல் முடிவு

நாளை மதியம் 12 மணிக்குள் வெளியாகும்

புதுச்சேரி, அக். 23: புதுவை காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தல் முடிவு நாளை மதியம் 12 மணியளவில் வெளியாகும் என மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் தெரிவித்துள்ளார்.காமராஜர் நகர் தொகுதிக்கான இடைத்தேர்தல் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதில் 69.44 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தது. 32 வாக்குச்சாவடிகளிலும் வாக்குப்பதிவு முடிந்தது மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் மற்றும் விவிபாட் இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு பலத்த பாதுகாப்புடன் மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரியில் உள்ள ஸ்ட்ராங் ரூமில் வைக்கப்பட்டது. அங்கு மூன்றடுக்கு பாதுகாப்பு போட்டுள்ளது.இந்நிலையில் நேற்று மதியம் மாவட்ட தேர்தல் அதிகாரி அருண் லாஸ்பேட்டையில் உள்ள மோதிலால் நேரு பாலிடெக்னிக் கல்லூரிக்கு சென்று ஆய்வு செய்தார். ஆய்வுக்கு பின்னர் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை (24ம் தேதி) எண்ணப்படும். அதற்காக வாக்கு எண்ணிக்கை மையத்தை பார்வையிட்டேன். இங்கு 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 20 சிசிடிவி கேமிராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. வேட்பாளர்கள், அவர்களது முகவர்கள் வாக்குப்பதிவு மையத்தை பார்வையிட பதிவு புத்தகமும் பராமரிக்கப்பட்டு வருகிறது. வாக்கு எண்ணுவதற்கு 11 டேபிள்கள் போடப்பட்டுள்ளது. 32 பூத் உள்ளதால் 3 சுற்றுகளாக வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.முதலில் காலை 8 மணிக்கு தபால் வாக்குகள் எண்ணப்படும். 8.30 மணிக்கு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். இவை எண்ணுவதற்கு ஒன்றரை மணி நேரம் ஆகும். அடுத்து 5 விவிபாட் இயந்திரத்தில் பதிவான வாக்குகள் எண்ணப்படும். அதற்கு ஒன்றரை மணி நேரம் ஆகும். மதியம் 12 மணியளவில் தேர்தல் முடிவு அறிவிக்கப்படும்.
Advertising
Advertising

மழைக்காலத்தை எதிர்கொள்ளும் பணி கடந்த 2 வாரத்திற்கு முன்பே ஆரம்பிக்கப்பட்டு விட்டது. கடந்த வாரமே தலைமை செயலர் தலைமையில் மறு ஆய்வு கூட்டம் நடந்தது. முதற்கட்டமாக மீனவர்களுக்கு எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. அதுபோல் மரக்கிளைகளை வெட்டும் பணியை மேற்கொள்ள மின்துறை மற்றும் வனத்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அவர்களும் செய்து வருகின்றனர். உயரமான கட்டிடங்களில் உள்ள விளம்பர பேனர்களை எடுக்கவும் தனியாக ஒரு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் வாய்க்கால் சுத்தம் செய்யும் பணியும் நடைபெற்று வருகின்றது. கன மழையின்போது தொடர்பு கொள்வதற்கான பணியும் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. பொதுப்பணித்துறை, நகராட்சிகள் இணைந்து வாய்க்கால்களை தூர்வாரவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். அதேபோல் காரைக்கால், ஏனாம் பகுதியிலும் எச்சரிக்கையோடு இருக்குமாறும் உத்தரவிட்டுள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

Related Stories: