தீபாவளி பண்டிகையையொட்டி அரசு ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ்

புதுச்சேரி, அக். 23:  தீபாவளி பண்டிகையையொட்டி புதுச்சேரி அரசு ஊழியர்களுக்கு தீபாவாளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தீபாவளி பண்டிகையையொட்டி 28ம் தேதி அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தீபாவளி பண்டிகை வரும் 27ம் தேதி கொண்டாடப்படுகிறது. காமராஜர் நகர் தொகுதி இடைத்தேர்தலை யொட்டி நன்னடத்தை விதிகள் அமலில் இருப்பதால் அரசு ஊழியர்கள் மற்றும் அரசு சார்பு நிறுவன ஊழியர்களுக்கு தீபாவளி போனஸ் முன்னதாக கிடைக்குமா? என்ற எதிர்பார்ப்பு எழுந்தது. அதன்படி அரசுத்துறைகளில் பணிபுரியும் அரசிதழ் பதிவு பெறாத பி-பிரிவு மற்றும் அனைத்து சி-பிரிவு ஊழியர்களுக்கு போனஸ் வழங்குவதற்கான அரசாணை நிதித்துறையின் மூலம் வெளியிடப்பட்டுள்ளது.அதன்படி அரசுத்துறைகளில் பணிபுரியும் பி-பிரிவு அலுவலர்கள் மற்றும் சி-பிரிவு ஊழியர்களுக்கு போனஸ் தொகை அதிகபட்சமாக ரூ. 6 ஆயிரத்து 908 வழங்கப்படும். 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் தினக்கூலி ஊழியர்களுக்கு போனஸ் தொகை அதிகபட்சமாக ரூ.1,184 கிடைக்கும். இதற்காக புதுச்சேரி அரசுக்கு சுமாராக ரூ.12 கோடிக்கு மேல் கூடுதலாக செலவாகும் என தெரிகிறது.

அதே நேரத்தில் அரசு சார்பு நிறுவனங்களுக்கு வழங்கப்பட வேண்டிய போனஸ் தொகை குறித்து அரசு ஆலோசனை நடத்தி வருகிறது. நடத்தை விதிகள் வரும் 27ம் தேதி மாலை வரை அமலில் இருப்பதால் இது தொடர்பான முடிவை எடுப்பதில் சிக்கல் எழுந்திருப்பதாக கூறப்படுகிறது. தீபாவளி போனஸ் அறிவிக்கப்பட்டுள்ளதால் 20 ஆயிரம் அரசு ஊழியர்கள் பயனடைகிறார்கள்.அதேபோல் தமிழகத்தை தொடர்ந்து, புதுச்சேரியிலும் தீபாவளிக்கு மறுநாள் 28ம் அரசு விடுமுறையாக அறிவிக்கபட்டுள்ளது.

இது குறித்து முதல்வர் நாராயணசாமி சட்டசபைக்கு வெளியே நிருபர்களிடம் கூறுகையில், தீபாவளி 27ம் தேதி ஞாயிற்றுக்கிழமை வருகிறது. தீபாவளி முடிந்து உடனடியாக வெளியூர்களுக்கு வேலைக்கு செல்வதற்கும், வெளிமாநிலங்களில் படிக்கும் மாணவர்களுக்கும் சிரமம் ஏற்படும். இதனால் தலைமை செயலரை அழைத்து ஆலோசித்தேன். புதுச்சேரி மக்கள் தீபாவளியை குடும்பத்தினர், உறவினர்களுடன் மகிழ்ச்சியாக, சிறப்பாக கொண்டாடுவதற்கு ஏதுவாக 28ம் தேதி (திங்கட்கிழமை) விடுமுறை அறிவிக்க உத்தரவிட்டுள்ளேன். அதன்படி 28ம் தேதி அரசு விடுமுறை தினமாக புதுச்சேரி அரசால் அறிவிக்கப்படும். இதனை ஈடுகட்டும் வகையில் அடுத்த மாதம் 9ம் தேதி (சனிக்கிழமை) அரசு அலுவலகங்கள் இயங்கும், என்றார்.

Related Stories: