சிவகங்கை மாவட்டத்தில் பருவமழை பரவாயில்லை அதிகபட்சமாக தேவகோட்டையில் 88 மிமீ பதிவு

சிவகங்கை, அக். 18:  சிவகங்கை மாவட்டத்தில் பருவமழை பரவலாக பெய்து வருகிறது. அதிகபட்சமாக தேவகோட்டையில் 88 மிமீ பதிவானது. சிவகங்கை மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பரவலாக மழை பெய்து வருகிறது. குறிப்பாக செப்டம்பர் மாத பிற்பகுதி மற்றும் அக்டோபர் மாத தொடக்கத்தில் இருந்து பரவலாக மழை பெய்து வருகிறது. கடந்த வாரம் மழை குறைந்த நிலையில் மீண்டும் தற்போது மழை பெய்து வருகிறது. கடந்த இரண்டு நாட்களில் அதிகபட்சமாக தேவகோட்டையில் 88.8 மி.மீ மழை பதிவானது. திருப்புவனத்தில் 76.6 மி.மீ, மானாமதுரையில் 58.1 மி.மீ, காரைக்குடியில் 56.7 மி.மீ, சிங்கம்புணரியில் 55.8 மி.மீ, இளையான்குடியில் 52 மி.மீ, திருப்பத்தூரில் 35 மி.மீ, காளையார்கோவிலில் 28.6 மி.மீ, மழை பதிவாகியுள்ளது. குறந்தபட்சமாக சிவகங்கையில் 14.7 மி.மீ மழை பதிவானது.

தற்போது மாவட்டம் முழுவதும் பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இதனால் பல்வேறு பகுதிகளிலும் விவசாயத்திற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த தொடர் மழையால் பொதுமக்களும், விவசாயிகளும் மகிழ்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது, ‘இந்த ஆண்டு தான் நீண்ட காலத்திற்கு பிறகு கடந்த ஆறு மாதங்களாக குளங்கள், கண்மாய்கள் உள்ளிட்ட எந்த நீர் நிலைகளிலும் முற்றிலும் நீர் இல்லாமல் போனது. ஆனால் தற்போது தென்மேற்கு பருவமழையும் இம்மழை முடிந்து வடகிழக்கு பருவமழையும் அடுத்தடுத்து பரவலாக பெய்து வருகிறது. தொடர்ந்து கனமழை பெய்து நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்திருப்பது மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இம்மாவட்ட விவசாயம் வடகிழக்கு பருவ மழையை நம்பியே செய்யப்படும என்பதால் தொடர்ந்து கனமழை பெய்து நீர்நிலைகளுக்கு நீர்வரத்து அதிகரித்தால் விவசாய பணிகளுக்கு உதவும்’ என்றனர்.

Related Stories: