சாத்தூர் ரயில் நிலையத்தில் வாகன காப்பகம் அமைக்க வேண்டும் பயணிகள் கோரிக்கை

சாத்தூர், அக். 16: சாத்தூர் ரயில்நிலையத்தில் இருசக்கர வாகன காப்பகம் அமைக்க வேண்டும் என பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். விருதுநகர் மாவட்டம், சாத்தூரில் தீப்பெட்டி ஆலைகள் உள்ளிட்ட பல்வேறு ஆலைகள் உள்ளன. இந்த ஆலைகளில் வெளி மாவட்டங்கள் மற்றும் வெளி மாநிலங்களைச் சேர்ந்த தொழிலாளர்கள் ஏராளமாக பணிபுரிகின்றனர். இவர்கள் பெரும்பாலும் சாத்தூருக்கு ரயிலில் வந்து இறங்குகின்றனர்.  இதேபோல, சிவகாசிக்கு வரும் தொழிலாளர்களும், தொழிலதிபர்களும் சாத்தூர் ரயில்நிலையம் வந்து பின்னர், பல்வேறு பகுதிகளுக்கு சென்று வருகின்றனர். இதனால், சாத்தூர் ரயில் நிலையத்தின் பயணிகளின் போக்குவரத்தும், வருவாயும் அதிகரித்துள்ளது. இந்த ரயில்நிலையம் வழியாக 20க்கும் மேற்பட்ட ரயில்கள் சென்று வருகின்றன. பஸ் கட்டணம் உயர்ந்த நிலையில், வெளியூர் செல்லும் பயணிகள் பெரும்பாலும் ரயிலில்தான் சென்று வருகின்றனர். இதனால், ரயிலில் பயணம் செய்வோரின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

டூவீலர் வாகன காப்பகம் இல்லை இந்நிலையில், சாத்தூர் ரயில்நிலையத்தில் போதிய வசதிகள் இருந்தும், டூவீலர் காப்பகம் மட்டும் இல்லை. இதுவரை ஒப்பந்த அடிப்படையில்தான் வாகன காப்பகம் செயல்பட்டு வந்தது. தற்போது ஒப்பந்தம் முடிவடைந்ததால் யாரும் வாகன காப்பகம் நடத்தவில்லை. ரயில் பயணிகள் தங்களது டூவீலர்களை ரயில்நிலையத்திற்கு வெளியே நிறுத்திவிட்டுச் செல்கின்றனர். இதனால், டூவீலர்கள் காணாமல் போவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும், வாகனங்களுக்கு பாதுகாப்பு இல்லாமல், அனைத்தும் வெயிலில் காய்ந்து, மழையில் நனைகின்றன.எனவே, ரயில் நிலையத்தில், பயணிகளுக்கு வாகன காப்பகம் அமைக்க ரயில்வே நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: