மதுரை மாநகராட்சியின் கீழ் 5 பள்ளிகளில் ரோபோடிக்ஸ் ஆய்வகங்கள் துவக்கம்

மதுரை, அக்.16: மதுரை மாநகராட்சியின் கீழ் உள்ள 5 பள்ளிகளில் ‘ரோபோடிக்ஸ்’ ஆய்வகங்களை கமிஷனர் விசாகன் துவக்கி வைத்தார்.பின்னர் அவர் விழாவில் பேசும்போது, ‘‘மதுரை மாநகராட்சி பள்ளி மாணவ, மாணவிகள் நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்ப ரோபேட்டிக் ஆய்வகம் கடந்த ஆண்டு மாநகராட்சி திரு.வி.க. பள்ளியில் துவங்கப்பட்டது. தற்போது மாநகராட்சி இளங்கோ பள்ளி, ஈ.வெ.ரா.நாகம்மையார் பெண்கள் பள்ளி. வெள்ளிவீதியார் பெண்கள் பள்ளி, கஸ்தூரிபாய்காந்தி பெண்கள் பள்ளி. பொன்முடியார் பெண்கள் பள்ளி என 5 பள்ளிகளில் ஹெச்.சி.எல். நிறுவனம் ரூ.35 லட்சம் பங்களிப்பு மற்றும் மாநகராட்சி நிதி ரூ.9 லட்சம் என மொத்தம் ரூ.44 லட்சம் மதிப்பீட்டில் ரோபோட்டிக் ஆய்வகம் நேற்று துவங்கப்பட்டது.

இந்த நவீன தொழில்நுட்ப ஆய்வகம் ரோபோக்கள், மடிக்கணினிகள் உள்ளிட்ட உட்கட்டமைப்பு வசதிகளுடன் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வகத்தில் 6ம் வகுப்பு முதல் 9ம் வகுப்பு வரை பயிலும் 2550 மாணவ, மாணவியர்களுக்கு ரோபோ மூலம் பயிற்சிகள் வழங்கப்படும். இதற்காக ரோபோட்டிக் மூலம் பாடம் நடத்தக்கூடிய பயிற்சி பெற்ற அனுபவம் உள்ள ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த ரோபோடிக்ஸ் ஆய்வகத்தில் சுயகற்றல் முறை, நடைமுறை பயிற்சி மற்றும் நடைமுறை கல்வி சூழ்நிலைகளில் மாணவர்களின் திறன் வெளிப்பாடு குறித்து கவனம் செலுத்துகிறது. சிக்கல் பகுப்பாய்வு, தீர்வு வடிவமைப்பு, விமர்சன சிந்தனை மற்றும் ஒத்துழைப்பு போன்ற 21ம் நூற்றாண்டு திறன்களைக் கொண்ட மாணவர்களாக தயார்படுத்துவதற்காக இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. மாநகராட்சியின் அனைத்து பள்ளிகளுக்கும் இத்திட்டம் படிப்படியாக நிறைவேற்றப்படும்’’ என்றார்.கல்வி அலுவலர் விஜயா, அமெரிக்கன் இந்தியா நிறுவனத்தின் இந்திய இயக்குனர் மேத்யூஜோசப், தென் மண்டல தலைவர் பாஸ்கரன், ஹெச்.சி.எல். நிறுவன இயக்குனர் நிதிபுந்திர், ஒருங்கிணைப்பாளர் ஷியாம் எபினேசர் உள்பட பலர் பங்கேற்றனர்.

Related Stories: