தொழிலதிபரை மிரட்டிய வழக்கு தாதா மர்டர் மணிகண்டனை கைது செய்ய தீவிர நடவடிக்கை

புதுச்சேரி,  அக். 16:  புதுவையில் தொழிலதிபரை மிரட்டிய வழக்கில் தாதா மர்டர் மணிகண்டனை  கைது செய்ய போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.புதுவை  உழவர்கரையில் வசிப்பவர் செல்வநாதன் ஒபினாஸ் (35), தொழிலதிபர். பிரான்ஸ்  நாட்டில் வசிக்கும் இவர் தனது உறவினரான ஏழுமலையிடம்  லட்சக்கணக்கில் கடன்  வாங்கியிருந்தாராம். ஏழுமலை பணத்தை திருப்பி கேட்டு வந்த நிலையில்  இப்பிரச்னையை தனது மற்றொரு உறவினரான லூர்துராஜிடம் அவர் முறையிட்டார்.  இந்த நிலையில், காலாப்பட்டு சிறையில் தாதா மர்டர் மணிகண்டன் மற்றும் அவனது  கூட்டாளிகளான பிரேம், பிரகாஷ், விக்கி உள்ளிட்டோர் செல்வநாதன் ஒபினாஸை  செல்போனில் தொடர்பு கொண்டு பணம் கேட்டு கொலை மிரட்டல் விடுத்தனர்.  இதுதொடர்பாக ரெட்டியார்பாளையம் போலீசில் அவர், புகார் அளித்தார்.

Advertising
Advertising

எஸ்ஐ  வீரபத்திரன் தலைமையிலான போலீசார் 2 பிரிவுகளில் ஏழுமலை, லூர்துராஜ், தாதா  மர்டர் மணிகண்டன் உள்ளிட்ட 6 பேர் மீதும் வழக்குபதிந்து விசாரணை நடத்தினர்.  பின்னர் லூர்துராஜை உடனே கைது செய்த போலீசார், அவன் கொடுத்த தகவலின்  பேரில் மர்டர் மணிகண்டனின் கூட்டாளிகளான பிரகாஷ், விக்கி இருவரையும் கைது  செய்தனர். பிடிபட்ட 3 பேரும் காலாப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.  இதனிடையே இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான தாதா மர்டர் மணிகண்டன்  காலாப்பட்டு சிறையில் உள்ள நிலையில் அவரை இவ்வழக்கில் கைது செய்ய  ரெட்டியார்பாளையம் போலீசுக்கு வடக்கு எஸ்பி ஜிந்தா கோதண்டராமன்  உத்தரவிட்டார். இதையடுத்து நீதிமன்றத்தில் இதற்கான அனுமதி கேட்டு  முறையிடும் நடவடிக்ைகயில் போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

 மாஜிஸ்திரேட்  அனுமதி கிடைத்ததும் காலாப்பட்டு சிறைக்கு செல்லும் போலீசார், மர்டர்  மணிகண்டனை கைது செய்ய உள்ளனர். அதன்பிறகு இவ்வழக்கின் கூடுதல் விசாரணைக்காக  அவரை காவலில் எடுக்கவும் போலீசார் திட்டமிட்டுள்ளனர். தொழிலதிபருக்கு  மர்டர் மணிகண்டன் சிறையில் இருந்தபடியே போனில் மிரட்டல் விடுத்த  சம்பவத்தையடுத்து காலாப்பட்டு சிறையில் அதிகாரிகள் கைதிகள் வார்டுகளில்  அதிரடி சோதனை நடத்தி செல்போன், பேட்டரிகளை கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது

Related Stories: