மதுரையில் இருந்து திருச்சி வந்த தேஜஸ் விரைவு ரயிலில் திடீர் புகையால் பயணிகள் அலறல்

திருச்சி, அக். 10: மதுரையிலிருந்து திருச்சி வந்த தேஜஸ் விரைவு ரயிலில் ஏற்பட்ட திடீர் புகையால் பயணிகள் அலறிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. மதுரையில் இருந்து சென்னைக்கு தேஜஸ் அதிவேக எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்பட்டு வருகிறது. வியாழக்கிழமை தவிர வாரத்தின் அனைத்து நாட்களிலும் பகலில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் முற்றிலும் ஏசி மற்றும் நவீன இருக்கைகள், கழிவறைகளுடன் பல்வேறு வசதிகளுடன் உள்ளது. இந்த ரயில் நேற்று முன்தினம் மதுரையில் இருந்து மாலை 3 மணிக்கு புறப்பட்டது. திருச்சிக்கு மாலை 4.50 மணிக்கு வந்து பயணிகளை ஏற்றி இறக்கிய பின்னர் மீண்டும் 5.05 மணிக்கு புறப்பட்டது. திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தை கடந்து சென்று கொண்டிருந்தபோது, சி.10 பெட்டியின் கழிவறையில் இருந்து திடீரென புகை வெளியேறியது. இதில் புகை உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் ஏற்பட்டால் தானியங்கி அலாரம் ஒலிக்கும் வசதி இருப்பதால் உடனடியாக அலாரம் ஒலித்தது. இதனால் ஓடும் ரயிலில் பயணிகள் மத்தியில் பரபரப்பு ஏற்பட்டது.

புகை மண்டலம் தீயாக மாறினால் பெரும் அசம்பாவிதம் ஏற்படும் என்ற எண்ணத்தில் பயணிகள் அலறி கூக்குரலிட்டனர். தீ விபத்து ஏற்பட்டுவிடுமோ என்ற அச்சத்தில் பயணிகள் அங்கும் இங்கும் ஓடியதால் ரயிலில் பீதி ஏற்பட்டது. இதில் பயணிகள் சிலர் இதுகுறித்து எஸ்எம்எஸ் மூலம் ரயில் டிரைவருக்கு தகவல் அளித்தனர். இதையடுத்து ரயில் உடனடியாக நிறுத்தப்பட்டது. தகவலறிந்த ரயில்வே அதிகாரிகள், தொழில்நுட்ப அதிகாரிகள் தேஜஸ் ரயிலுக்கு விரைந்தனர். ரயிலில் சி10 பெட்டியில் சோதனை நடத்தப்பட்டதில் கழிவறையில் பயணி ஒருவர் சிகரெட் புகைத்து அதனை அணைக்காமல் வீசி சென்றதால் கழிவறை பகுதியை புகை சூழ்ந்தது. இதனால் புகை வெளியேற முடியாமல் தானியங்கி அலாரம் ஒலித்தது தெரியவந்தது. தொடர்ந்து பயணிகளை சமாதானப்படுத்திய அதிகாரிகள் ரயிலை மீண்டும் இயக்க உத்தரவிட்டனர். பெட்டியில் தங்களுக்கு போதுமான பாதுகாப்பு வசதிகளை ஏற்படுத்தி கொடுக்க வேண்டும் என பயணிகள் கூறியதையடுத்து ரயில் 15 நிமிடம் தாமதமாக புறப்பட்டு சென்னை சென்றது. இச்சம்பவத்தினால் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

Related Stories: