வாலிபரை அரிவாளால் வெட்டிய 4 பேர் கும்பல் அதிரடி கைது

புதுச்சேரி,  அக். 10:  புதுச்சேரியில் வாலிபரை ஓடஓட விரட்டி கொலை வெறி தாக்குதல்  நடத்திய 4 பேர் கும்பலை போலீசார் கைது செய்தனர். போலீசார் நடத்திய  விசாரணையில் பரபரப்பு தகவல் அம்பலமாகி உள்ளது. புதுவை, திலாசுபேட்டை,  மாந்தோப்பு வீதியைச் சேர்ந்தவர் மணி மகன் ஆறுமுகம் (29). மேடை அலங்காரம்  செய்யும் தொழிலாளியான இவர், வேலை இல்லாத நாட்களில் பெயிண்டிங் வேலைக்கு  செல்வது வழக்கம். இவருக்கு அவரது குடும்பத்தினர் திருமண ஏற்பாடுகள் செய்து  வந்தனர். இதனிடையே நேற்று முன்தினம் இரவு ஆறுமுகம் கோரிமேடு காவல்  நிலையம் அருகிலுள்ள ஒர்க்ஷாப்பில் நின்று கொண்டிருந்தார். அங்கிருந்து  இரவு 7 மணியளவில் அவர் வீட்டிற்கு புறப்பட்ட நிலையில் திண்டிவனம் சாலையில்  வந்தபோது 2 பைக்கில் வந்த 6 பேர் கும்பல் அவரை வழிமறித்தது.பின்னர்  அதிலிருந்த கத்தி, அரிவாள் உள்ளிட்ட ஆயுதங்களுடன் இறங்கிய 4 பேர்  ஆறுமுகத்தை ஓடஓட விரட்டி வெட்டியது. இதில் தலை, கழுத்தில் வெட்டுக் காயம்  விழுந்த ஆறுமுகம் அங்கே மயங்கி விழுந்த நிலையில், அக்கும்பல் அங்கிருந்து  தலைமறைவாகி விட்டது.

தகவல் அறிந்த கோரிமேடு இன்ஸ்பெக்டர் கிருஷ்ணன்,  எஸ்ஐ கலையரசன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று  ஆறுமுகத்தை மீட்டு சிகிச்சைக்காக ஜிப்மரில் சேர்த்தனர். அங்கு தீவிர  சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்ட அவருக்கு மருத்துவக்குழு தொடர்ந்து  சிகிச்சை அளித்து வருகிறது. இதையடுத்து சீனியர் எஸ்பி ராகுல்அல்வால்  உத்தரவின்பேரில், கொலை முயற்சி வழக்குபதிந்த கோரிமேடு போலீசார் ஆறுமுகத்தை  தாக்கிய கும்பல் குறித்து விசாரணை நடத்தினர். இதில், திலாசுபேட்டையைச்  சேர்ந்த ஆறுமுகத்துக்கும், லாஸ்பேட்டையைச் சேர்ந்த மணிரத்தினம் தலைமையிலான  தரப்புக்கும் ஏற்கனவே 2017ல் அடிதடி தகராறு ஏற்பட்டு முன்விரோதம்  இருந்ததும், இதுதொடர்பான வழக்கை வாபஸ் பெறுவது, சாட்சி கூறுதல் தொடர்பாக  சமீபத்தில் அவர்களுக்குள் மோதல் ஏற்பட்டதும் தெரியவந்தது.இதன் காரணமாக  தற்போது ஆறுமுகத்தை எதிர்தரப்பு தீர்த்துக்கட்ட முடிவெடுத்து கொலை வெறி  தாக்குதலில் ஈடுபட்டிருப்பது அம்பலமானது. அதன்பேரில் தேடுதல் பணிகளை  முடுக்கி விட்ட தனிப்படை, சம்பவம் நடந்த பகுதியில் உள்ள சிசிடிவி  கேமிராக்களை பார்வையிட்டு குற்றவாளிகளில் சிலரை அடையாளம் கண்டனர்.

அதன்பேரில்  லாஸ்பேட்டை, குறிஞ்சி நகர் மணிரத்தினம் (24), ஜீவானந்தபுரம் பிரேம்குமார்  (21), தட்டாஞ்சாவடி வெற்றிச்செல்வம் (24), ஜீவானந்தபுரம் சாலமோன் (19),  நாவற்குளம் மணி என்ற டாம்மணி (25) மற்றும் வெற்றி (26) உள்ளிட்ட 6 பேரை  தேடிய நிலையில் டாம்மணி, வெற்றியைத் தவிர்த்து மற்றவர்கள் நேற்று போலீசார்  கைது செய்தனர். அவர்களிடம் தனிப்படை தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளது. பிடிபட்டவர்களில்  மணிரத்தினம், பிரேம் குமார் மீது ஏற்கனவே வழக்குகள் நிலுவையில் உள்ளது.  தலைமறைவாக உள்ள வெற்றி மீது தமிழகத்தில் வழப்பறி வழக்கு உள்ளன. இதனிடையே  கொலைவெறி தாக்குதலுக்குள்ளான ஆறுமுகத்துக்கு ஜிப்மரில் தொடர்ந்து தீவிர  சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில் அவரது உடல்நிலையில் முன்னேற்றம்  ஏற்பட்டு வருவதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Related Stories:

>