திருக்கனூரில் மணல் கடத்திய 3 மாட்டு வண்டிகள் பறிமுதல்

திருக்கனூர், அக். 4:    திருக்கனூர் பகுதியில் மணல் கடத்தி வந்த 3 மாட்டு வண்டிகளை போலீசார் பறிமுதல் செய்தனர்.  திருக்கனூர் அருகே உள்ள காட்டேரிக்குப்பம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட சுத்துகேணி, தேத்தாம்பாக்கம் ஆகிய பகுதிகளில் சங்கராபரணி ஆற்றங்கரையோரம் திருட்டுத்தனமாக மாட்டு வண்டியில் மணல் அள்ளி செல்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் காட்டேரிக்குப்பம் சப்-இன்ஸ்பெக்டர் முருகானந்தம் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கொண்டிருந்தனர். அப்போது, சுத்துகேணி - மயிலம் பாதை அருகே 2 மாட்டு வண்டிகளில் மணல் ஏற்றி கொண்டு வந்தனர். மாட்டு வண்டியில் வந்த நபர்கள் போலீசார் வருவதை பார்த்தவுடன், அதே இடத்தில் மாட்டு வண்டியை விட்டுவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதையடுத்து, போலீசார் மணலுடன் 2 மாட்டு வண்டியை பறிமுதல் செய்தனர்.   தொடர்ந்து, தேத்தாம்பாக்கம் பகுதிக்கு செல்லும்போது, ஒரு மாட்டு வண்டியில் மணல் ஏற்றி கொண்டு வருவதை போலீசார் பார்த்தனர். பின்னர், அந்த மாட்டு வண்டியை பறிமுதல் செய்ததுடன், வண்டியை ஓட்டி வந்த நபரையும் பிடித்து விசாரித்தனர். விசாரணையில், அவர் தேத்தாம்பாக்கத்தை சேர்ந்த சுரேஷ்குமார் என்பது தெரிய வந்தது. இதையடுத்து, போலீசார் சுரேஷ் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: