வேலூர் சிஎம்சி மருத்துவமனை புதிய வளாகத்தில் அடிப்படை பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதற்கு எதிர்ப்பு கண்காணிப்பாளர் அறையை முற்றுகையிட்ட பணியாளர்கள்

வேலூர், அக்.4: வேலூர் அருகே அமைய உள்ள சிஎம்சியின் புதிய வளாகத்தில் அடிப்படை பணியாளர்களை ஒப்பந்த அடிப்படையில் நியமிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து மருத்துவமனையின் அடிப்படை பணியாளர்கள் முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டதால் நேற்று காலை மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.வேலூர் சிஎம்சி மருத்துவமனையின் புதிய வளாகம் பெங்களூரு- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் ரத்தினகிரி கன்னிகாபுரத்தில் அமைய உள்ளது. இம்மருத்துவமனையில் தற்போது அனைத்து நிலை பணியாளர்களை நியமிக்கும் பணி நடந்து வருகிறது. இந்நிலையில் அடிப்படை பணியாளர்களை அவுட்சோர்சிங் முறையில் நியமிக்க மருத்துவமனை நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. குறிப்பாக இப்பணிகளில் வடமாநிலங்களை சேர்ந்தவர்கள் நியமிக்கப்படலாம் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதற்கு சிஎம்சி மருத்துவமனை ஊழியர்கள் தரப்பில் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இந்நிலையில், நேற்று காலை மருத்துவமனை பொது கண்காணிப்பாளர் அறையை மருத்துவமனையின் அடிப்படை பணியாளர்கள் முற்றுகையிட்டனர். அப்போது, சிஎம்சி மருத்துவமனையில் ஸ்கடர் அம்மையார் காலம் தொட்டு பின்பற்றப்பட்டு வரும் பணியாளர் நியமன முறையையே பின்பற்ற வேண்டும். அதன்படி, அடிப்படை பணியாளர்களை தற்போது பணியாற்றி வரும் பணியாளர்களின் வாரிசுகள், அவர்களை சாந்தவர்களுக்கே வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.இதனால் சிஎம்சி மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து மருத்துவமனை நிர்வாகத்தரப்பில் மருத்துவமனை பணியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடந்தது. அப்போது, கோரிக்கை குறித்து மருத்துவமனை நிர்வாகக்குழு கூடி உரிய முடிவு எடுக்கும் என்று உறுதியளிக்கப்பட்டது. இதையடுத்து அவர்கள் முற்றுகையை கைவிட்டு கலைந்து சென்றனர்.

அதேபோல் இம்மருத்துவமனையில் கட்டிட பணிகளை செய்து வரும் உள்ளூர் கட்டுமான நிறுவனத்தில் உள்ளூர் கட்டிடத்தொழிலாளர்களுடன், வடமாநில தொழிலாளர்களும் ஈடுபட்டுள்ளனர். இந்நிலையில் நேற்று காலை குறித்த நேரத்தில் பணிக்கு வராததால் உள்ளூர் தொழிலாளர்களை வேலைக்கு வர வேண்டாம் என்று கட்டுமான நிறுவனம் தெரிவித்ததாக கூறப்படுகிறது. அதோடு இனி வடமாநில தொழிலாளர்களே பணிக்கு போதும் என்றும் தெரிவித்ததாம்.இதனால் ஆத்திரமடைந்த உள்ளூர் தொழிலாளர்கள் அங்கு முற்றுகையில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து வந்த வடக்கு போலீசார் உள்ளூர் தொழிலாளர்களை அப்புறப்படுத்தினர். ஆனாலும், உள்ளூர் தொழிலாளர்களின் பணி வாய்ப்பை பறித்து வடமாநில தொழிலாளர்களுக்கு அந்த வாய்ப்பை வழங்குவது சரியல்ல. இதுதொடர்பாக கட்டுமான தொழிலாளர் சங்க நிர்வாகிகளிடம் புகார் தெரிவிப்போம் என்றும் உள்ளூர் தொழிலாளர்கள் கூறினர்.

Related Stories: