மதுராந்தகம் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில் விவசாயிகளை ஒருங்கிணைத்து உழவர் உற்பத்தி நிறுவனம்

மதுராந்தகம், அக்.2: மதுராந்தகம் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை சார்பில், உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் ஏற்படுத்த தீவிர முயற்சி நடந்து வருகிறது. மதுராந்தகம் தாலுகா முழுவதும் விவசாயிகள் நிறைந்த பகுதி என்பதால்,  இந்த பகுதிகளில் பெரும்பாலும் நெல், கரும்பு, வேர்க்கடலை, காய்கறிகள் பயிர்கள் பரவலாக செய்யப்படுகின்றன. இந்த  பயிர்களின் பலன் முழுமையாக விவசாயிகளை சென்றடைய, இடைத்தரகர்கள் இல்லாமல் விவசாயிகள் லாபம் அடைய வேளாண் துறையின் சார்பில் ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட உழவர் ஆர்வலர் குழுக்களை ஒன்றிணைத்து 1000   விவசாயிகளை கொண்ட அமைப்பாக மாற்றி  உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் ஏற்படுத்தப்படுகிறது.இந்நிறுவனத்தில் இணையும் விவசாயி ஒருவர், அவரது பங்கு தொகையாக ₹1000 செலுத்தவேண்டும். அதே அளவுக்கு அரசு ₹1000 செலுத்துகிறது. இவ்வாறாக ஒரு நிறுவனத்தில் ₹20 லட்சம் முதலீடு இருக்கும். அதில், 10 பேர் கொண்ட  இயக்குனர் குழு மூலமாக நிர்வாகம் நடைபெறும். இதன் மூலம் இடுபொருட்களை மொத்த விலைக்கு கொள்முதல் செய்து, விவசாயிகள் பிரித்து கொள்ளும் பட்சத்தில் குறைவான விலைக்கே உரங்கள் மற்றும் பூச்சி மருந்துகள் உள்பட பல்வேறு  விவசாய பொருட்கள் கிடைக்கும்.

மேலும், விவசாயிகள் உற்பத்தி செய்யும் பொருட்களை மதிப்புக்கூட்டி உணவு பொருள் பாதுகாப்பு சான்றுடன் சந்தை படுத்தலாம். இதனால், விவசாயிகளுக்கு கூடுதல் லாபம் கிடைக்கும். அதேபோன்று, அவர்கள் பயிரிடும் காய்கறி, பழங்களை  உழவர் சந்தையின் மூலம் கோயம்பேடு வணிக வளாகத்துக்கு குறைந்த செலவில் கொண்டு செல்ல நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன. விவசாயிகளுக்கு தேவையான தொழில்நுட்ப பயிற்சி அளித்தல் மூலமாக விவசாயிகளின் பொருளாதார வளர்ச்சியை மேம்படுத்த முடியும் என மதுராந்தகம் வேளாண் விற்பனை மற்றும் வணிகத்துறை அலுவலர் தெரிவித்தார். மேலும், இது  குறித்து, கூடுதல் தகவல்களை விவசாயிகள் பெறவேண்டுமானால் மதுராந்தகம் வேளாண் விற்பனை மற்றும் வணிக  அலுவலகத்தை அணுகலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: