டெங்கு காய்ச்சல் தடுப்பு விழிப்புணர்வு பேரணி

திருவள்ளூர், அக். 2: திருவள்ளூரில் டெங்கு காய்ச்சல் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் நடந்த பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு பேரணியை, மாவட்ட கலெக்டர் மகேஸ்வரி ரவிக்குமார் துவக்கி வைத்து,  உறுதிமொழியினை ஏற்றுக்கொண்டார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள ஆவடி மாநகராட்சி, 4 நகராட்சி மற்றும் 14 ஒன்றியங்கள், 10 பேரூராட்சிகள் என அனைத்திலும், துணை கலெக்டர் தலைமையில்; 29 டெங்கு ஒழிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது. இப்பணிக்காக 29  அலுவலர்கள் நியமிக்கப்பட்டு, களத்தில் பணியாளர்கள் முறையாக செயல்படுகின்றனரா என்பதனை கண்காணித்து, நாள்தோறும் அறிக்கை அளிப்பார்கள்.

மேலும், 886 கொசு ஒழிப்பு பணியாளர்கள் பணியில் ஈடுபடுத்தப்பட்டு உள்ளனர். இப்பணியாளர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று ஏடிஎஸ் கொசுக்கள் எப்படி உற்பத்தியாகிறது என்பது குறித்தும், தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வு  ஏற்படுத்தி வருகின்றனர். காய்ச்சல் அதிகம் காணப்படும் இடங்களை கண்டறிந்து, அங்கு மருத்துவ முகாம் நடத்தப்பட்டு வருகிறது. காய்ச்சல் வந்தால் பொதுமக்கள் தானாக மருந்து உட்கொள்ளுதல் கூடாது. உடனடியாக அரசு மருத்துவமனையை அணுகி உரிய சிகிச்சை  பெற வேண்டும்’’’’ என்றார். நிகழ்ச்சியில், சுகாதாரத்துறை இணை இயக்குநர் தயாளன், துணை இயக்குநர் கிருஷ்ணராஜ், நகராட்சி ஆணையர் பி.மாரிச்செல்வி, வட்டாட்சியர் பாண்டியராஜன், சுகாதார அலுவலர் கோவிந்தராஜ் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

Related Stories: