மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளான இன்று அனைத்து பள்ளிகளிலும் ‘பிட் இந்தியா’ விழிப்புணர்வு ஓட்டம்

* நிகழ்ச்சியை வீடியோ பதிவு செய்ய கல்வித்துறை உத்தரவு * விடுமுறை நாளில் மாணவர்களை வரவழைப்பதில் சிக்கல்

திருவண்ணாமலை, அக்.2: காந்தி ஜெயந்தியை முன்னிட்டு இன்று அனைத்துப் பள்ளிகளிலும், உடல் நலம் மற்றும் சுற்றுப்புற தூய்மைக்கான விழிப்புணர்வு ஓட்டம் நடத்த கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் காலாண்டுத் தேர்வு விடுமுறை நாட்களில், மகாத்மா காந்தியின் 150வது பிறந்த நாளை முன்னிட்டு காந்திய சிந்தனைகள் குறித்த வகுப்பு நடத்த வேண்டும் என தகவல் பரவியது. அதனால், காலாண்டுத் தேர்வு விடுமுறை ரத்தாகும் என கூறப்பட்டது.

ஆனால், காலாண்டு விடுமுறை ரத்து எனும் தகவல் உண்மையல்ல, தேர்வு கால விடுமுறை வழக்கம் போல உண்டு என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அறிவித்தார். அதன்படி, இன்றுடன் காலாண்டு விடுமுறை முடிந்து, பள்ளிகள் நாளை திறக்கபட உள்ளது.

இந்நிலையில், காந்தி ஜெயந்தி தினமான இன்று அனைத்து பள்ளிகளிலும், பிரதமர் மோடி கடந்த ஆகஸ்ட் மாதம் தொடங்கி வைத்த பிட் இந்தியா இயக்கத்தின் தொடர் நிகழ்ச்சியாக, உடல் நலம் மற்றும் சுற்றுப்புற தூய்மைக்கான பிட் இந்தியா பிளகிங் ரன் விழிப்புணர்வு ஓட்டம் நடத்த வேண்டும் என தமிழக கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.

மேலும், அனைவருக்குமான ஒருங்கிணைந்த கல்வி திட்ட மாநில இயக்குநர், இது தொடர்பாக அனைத்து முதன்மைக் கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், அனைத்து பள்ளிகளிலும் ‘பிட் இந்தியா பிளகிங் ரன்’ எனும் உடல் நலன் மற்றும் சுற்றுப்புற தூய்மைக்கான விழிப்புணர்வு ஓட்டத்தை நடத்தி, அதனை வீடியோ மற்றும் புகைப்படமாக பதிவு செய்து அனுப்ப வேண்டும் என தெரிவித்துள்ளார்.அதோடு, ஓட்டத்தின் போது பொது இடங்கள், வீதிகள் மற்றும் வீடுகளில் பிளாஸ்டிக் பொருட்களை சேகரித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளார். அதன்படி, அனைத்து பள்ளிகளிலும் இந்நிகழ்ச்சியை நடத்த வேண்டும் என தலைமை ஆசிரியர்களுக்கு நேற்று அவரச உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது.இந்நிலையில், காலாண்டுத் தேர்வு விடுமுறை மற்றும் காந்தி ஜெயந்தி அரசு விடுமுறை தினமான இன்று, மாணவர்களை பள்ளிகளுக்கு வரவழைத்து நிகழ்ச்சியை நடத்துவதில் நடைமுறை சிக்கல் ஏற்பட்டுள்ளது. எனவே, பள்ளி மாணவர்களின் பெற்றோர்களை செல்போன்களில் தொடர்புகொண்டு தலைமை ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் தகவல் தெரிவித்து வருகின்றனர்.

Related Stories: