புதுவையிலும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டமா?

புதுச்சேரி, அக். 1: தமிழகத்தைப்போல் புதுவையிலும் நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் நடந்ததா? என்பது தொடர்பாக தமிழக சிபிசிஐடி திடீரென முகாமிட்டு விசாரணையில் இறங்கியிருப்பதால் எம்பிபிஎஸ் மாணவர்கள், பெற்றோர்கள் கலக்கமடைந்துள்ளனர்.தமிழகத்தில் நீட் தேர்வில் நடந்த ஆள்மாறாட்ட மோசடி மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. ஆள்மாறாட்டம் செய்த மாணவர்களில் சிலர் சிக்கிய நிலையில், இர்பான் உள்ளிட்ட சிலர் மொரீஷியஸ் நாட்டுக்கு தப்பிச் சென்றதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த மோசடி தொடர்பாக சிபிசிஐடி போலீசார் தர்மபுரியில் முகாமிட்டு தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். தமிழகத்தைச் சேர்ந்த மாணவர்கள் எத்தனை பேர் வெளி மாநிலங்களில் நீட் தேர்வு எழுதினர் என்ற பட்டியலை திரட்டினர். இந்த நிலையில் தமிழக சிபிசிஐடி காவல்துறையில் ஒருபிரிவினர் கடந்த 2 தினங்களுக்கு முன்பு திடீரென புதுச்சேரி வந்தனர். பல்கலைக்கழகத்தில் முக்கிய நபர்களை சந்தித்து விசாரணை நடத்திய சிபிசிஐடி போலீசார், அங்கு சில ஆவணங்களை கைப்பற்றியதாக தெரிகிறது. மேலும் பொறியியல் கல்லூரி பேராசிரியர் ஒருவரிடமும் இரட்டை குடியுரிமை விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி சென்றிருப்பதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன. மேலும் மோசடியில் ஈடுபட்ட இடைத்தரகர்கள் யாராவது புதுவையில் பதுங்கி உள்ளார்களா? என்பது தொடர்பாகவும் ேதடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். ஏற்கனவே புதுவையிலும் ஜிப்மர் எம்பிபிஎஸ் தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த மாணவி கிருத்திகா இரட்டை முகவரியை பெற்று தமிழகம், புதுவையில் தேர்வு எழுதிய மோசடி கண்டறியப்பட்டு விசாரணையில் உள்ள நிலையில் தமிழக சிபிசிஐடி இங்கு முகாமிட்டு விசாரணையில் இறங்கியிருப்பது எம்பிபிஎஸ் மாணவர்கள், பெற்றோர்கள் இடையே கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. தமிழகத்தைபோல் புதுவையில் நீட் தேர்வில் ஆளமாறாட்ட மோசடி நடந்துள்ளதா? என்ற சந்தேகம் வலுத்துள்ளதால் அடுத்தகட்ட பரபரப்பு எழுந்துள்ளது.

Related Stories: