தல்லாகுளம் பெருமாள் கோயில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா

அலங்காநல்லூர், அக்.1: மதுரை தல்லாகுளம் பெருமாள் கோயிலில் புரட்டாசி பிரம்மோற்சவ விழா நேற்று கொடியேற்றத்துடன் துவங்கியது. மதுரை மாவட்டம், அழகர்கோவிலிலுள்ள கள்ளழகர் கோயிலின் உபகோயில் மதுரை தல்லாகுளம் பிரசன்ன வெங்கடாஜலபதி பெருமாள்கோயில். இக்கோயிலில் நடைபெறும் திருவிழாக்களில் புரட்டாசி மாதம் நடைபெறும் பிரமோற்சவ விழா தனிச்சிறப்பு வாய்ந்தது. இந்த விழா நேற்று காலை திங்கட்கிழமையன்று காலை 7.15 மணிக்கு மேளதாளம் முழங்க 7 மணிக்குள்  கொடிமரத்தில் கருடன் உருவம் பொறித்த கொடியேற்றப்பட்டது. அப்போது கொடிமரம் நாணல்புல், மாவிலைகள், பூமாலைகள் ஆகியவற்றால் அலங்கரிக்கப்பட்டது. பின்னர் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. பின்னர் இரவு அன்னவாகனத்தில் சுவாமி புறப்பாடு நடந்தது. இன்று 1ம் தேதி காலையில் கிருஷ்ணாவதாரமும், இரவு சிம்ம வாகனமும், 2ம் தேதி காலையில் ராமர் அவதாரமும், இரவு அனுமார் வாகனமும், 3ம் தேதி காலையில் கஜேந்திர மோட்சமும், அன்று இரவு கருடவாகனத்தில் சுவாமி புறப்பாடும், 4ம் தேதி காலையில் ராஜாங்கசேவையும், இரவு சேஷவாகனத்தில் பெருமாள் புறப்பாடும் நடைபெறும்.

5ம் தேதி காலையில் காளிங்கநர்த்தனமும், அன்று இரவு மோகன அவதாரமும், தொடர்ந்து யானை வாகனத்தில் சுவாமி புறப்பாடு நடைபெறும். 6ம் தேதி காலையில் சேஷசயனமும், இரவு புஷ்பசப்பரமும், 7ம் தேதி காலையில் வெண்ணைதாழியும், இரவு குதிரை வாகன புறப்பாடும், 8ம் தேதி காலையில் திருத்தேரோட்டமும், இரவு பூப்பல்லக்கு நிகழ்ச்சியும், 9ம் தேதி பூச்சப்பரமும் நடைபெறும்.தொடர்ந்து 10ம் தேதி காலையில் திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உற்சவம் நடைபெறும். இதில் அன்று காலை 7.31 மணிக்கு மேல் 8.15 மணிக்குள் பெருமாள் தேவியர்களுடன் தெப்பத்திற்கு எழுந்தருள்வார். தொடர்ந்து 10.45 மணிக்கு மேல் 11.15 மணிக்குள் தெப்ப உற்சவம் நடைபெறும். 11ம் தேதி உற்சவ சாந்தியுடன் திருவிழா நிறைவுபெறுகிறது. திருவிழா ஏற்பாடுகளை தக்கார் வெங்கடாசலம், நிர்வாக அதிகாரி அனிதா மற்றும் கண்காணிப்பாளர்கள், திருக்கோயில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Related Stories: