வட கிழக்கு பருவமழையை சமாளிக்க தயார் நிலையில் நெடுஞ்சாலைத்துறை

ஊட்டி, அக். 1: வடகிழக்கு பருவமழை நெருங்கிய நிலையில் நீலகிரி மாவட்டத்தில் மழை சேதங்களை உடனுக்குடன் சீரமைக்க 15 பொக்லைன் வாகனங்கள் மற்றும் 4500 மணல் மூட்டைகளுடன் நெடுஞ்சாலைத்துறை தயாராக உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். வடகிழக்கு பருவமழை நீலகிரியில் தீவிரம் அடைவதற்கு முன், முன் எச்சரிக்கையாக அனைத்து துறைகளையும் மாவட்ட நிர்வாகம் உஷார் படுத்தியுள்ளது. போக்குவரத்து தடை ஏற்படாமல் இருக்க நெடுஞ்சாலைத்துறை தயார் நிலையில் உள்ளது. மாவட்டத்தில் அனைத்து பகுதிகளிலும் பொக்லைன், மரம் அறுக்கும் இயந்திரங்கள், மணல் மூட்டைகள் மற்றும் சவுக்கு மரங்கள் மற்றும் அதற்கு தேவையான பணியாட்களும் தயார் நிலையில் உள்ளனர்.

இதுகுறித்து நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் கூறியதாவது, ‘‘நீலகிரி மாவட்டத்தில் கடந்த காலங்களில் வட கிழக்கு பருவமழையின் போது மாவட்டத்தை இணைக்கும் சாலைகள் மற்றும் பல்வேறு கிராம சாலைகளில் நிலச்சரிவுகள் ஏற்பட்டதால் போக்குவரத்து துண்டிக்கப்பட்டது. தற்போது பருவமழை துவங்கும் முன்னரே அனைத்து பகுதிகளிலும் முன் எச்சரிக்கை நடவடிக்கையாக சீரமைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நிலச்சரிவு ஏற்பட்டால் அதை உடனுக்குடன் சீரமைக்க தயார் நிலையில் உள்ளோம். இதற்காக மாவட்டத்தில் ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர், குந்தா ஆகிய பகுதிளில் 15 பொக்லைன் வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது. இது தவிர நிலச்சரிவு ஏற்படும் இடங்களாக கண்டறியப்பட்டுள்ள இடங்களுக்கு உடனுக்குடன் மணல் மூட்டைகளை கொண்டு சென்று அடுக்கி போக்குவரத்தை சீரமைக்க 4500 மணல் மூட்டைகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.

இது தவிர அனைத்து பகுதிகளிலும் சாலை பணியாளர்கள் மற்றும் தற்காலிக பணியாளர்கள் உள்ளனர். மேலும், ஊட்டி - கோத்தகிரி உட்பட அனைத்து முக்கிய சாலைகளிலும் உள்ள மோரிகள், கால்வாய்களில் தூர்வாரப்பட்டு மழை நீர் தடையின்றி செல்ல ஏற்றவாறு அமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இம்முறை வட கிழக்கு பருவமழையின் போது சாலைகளில் நிலச்சரிவு மற்றும் மண் சரிவு ஏற்பட்டால், உடனடியாக சீரமைக்கப்பட்டும். இவ்வாறு, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

Related Stories: