ஓராண்டு குத்தகை முடிந்து ஏலம் விடாததால் கிராம கோயில் நிலங்களை தனியார் ஆக்கிரமிக்கும் அபாயம்

திருப்போரூர், செப்.26: ஓராண்டு குத்தகை முடிந்து ஏலம் விடததால், காயார் கிராம கோயில் நிலங்களை தனியார் ஆக்கிரமிக்கும் அபாயம் உள்ளது. இதனால், அறநிலையத்துறை நடவடிக்கை எடுக்க வலியுறுத்தப்படுகிறது. திருப்போரூர் ஒன்றியம் காயார் கிராமத்தில் ஆடேரீஸ்வரர் கோயில் மற்றும் வரதராஜ பெருமாள் கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களுக்கு சுமார் 10 ஏக்கர் 52 சென்ட் நிலங்கள் உள்ளன. இந்து அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களையும், அவற்றுக்கு சொந்தமான நிலங்களையும் திருப்போரூர் கந்தசுவாமி கோயில் நிர்வாகம் சேர்ந்து கவனித்து வருகிறது.இதில், வரதராஜ பெருமாள் கோயில் நிலம், கடந்த 25 ஆண்டுகளாக கேட்பாரற்று இருந்தது. இதனால், தனியார் சிலர் ஆக்கிரமித்து அனுபவித்து வந்தனர்.

இதையடுத்து காயார் கிராம மக்கள், இந்த ஆக்கிரமிப்பை அகற்றி கோயிலுக்கு கையகப்படுத்த வேண்டும் என கலெக்டர் மற்றும் இந்து அறநிலையத்துறை உதவி ஆணையருக்கு மனுக்கள் அனுப்பினர்.இதைதொடர்ந்து கடந்த 2 ஆண்டுகளுக்கு முன், நிலம் கையகப்படுத்தப்பட்டு தற்போது ஆண்டு ரொக்க குத்தகைக்கு விடப்படுகிறது. கடந்த ஆண்டு சுமார் ₹47 ஆயிரத்துக்கு இந்த நிலம் குத்தகைக்கு விடப்பட்டு அறநிலையத் துறைக்கு வருவாய் கிடைத்தது.கடந்த ஆண்டு குத்தகை ஒப்பந்தம் முடிவடைந்த பிறகு, புதிய குத்தகைக்கு ஏலம் விடவில்லை என காயார் கிராம மக்கள் குற்றஞ்சாட்டுகின்றனர். இதனால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதோடு மீண்டும் தனியார் ஆக்கிரமிப்புக்கு சென்று விடுமோ என அச்சம் தெரிவிக்கின்றனர்.எனவே, காயார் கிராமத்தில் உள்ள ஆடேரீஸ்வரர் கோயில் மற்றும் வரதராஜ பெருமாள் கோயில் நிலங்களை உரிய நேரத்தில் குத்தகைக்கு விட வேண்டும் என அப்பகுதி மக்கள் வலியுறுத்துகின்றனர்.

Related Stories: