பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் சங்க பொதுக்குழு கூட்டம்

தென்காசி,  செப். 25:  அகில இந்திய பிஎஸ்என்எல் ஓய்வூதியர்கள் சங்க பொதுக்குழு கூட்டம், தென்காசி மேலகரம் திரிகூட ராசப்ப கவிராயர் மண்டபத்தில் நடந்தது. சங்க தலைவர் பரமசிவன் தலைமை வகித்தார். துரைராஜ் இறைவணக்கம் பாடினார். செயலாளர் செல்லப்பா வரவேற்றார். பொருளாளர் வேலாயுதம் வரவு- செலவு கணக்கை தாக்கல் செய்தார். கூட்டத்தில் தென்காசியை தனி மாவட்டமாக அறிவித்த தமிழக அரசுக்கு நன்றி தெரிவிப்பது. தென்காசியை தனி மாவட்டமாக தமிழக அரசு அறிவித்துள்ள நிலையில் நமது சங்கத்தை தென்காசி மாவட்ட சங்கமாக அறிவிக்க சங்கத்தின் மாநிலச் செயலருக்கு கோரிக்கை அனுப்புவது. செங்கோட்டையில் இருந்து சென்னை செல்லும் பொதிகை விரைவு ரயிலை நெல்லைக்கு மாற்றாமல் தேவையான பிட்லைன்களை செங்கோட்டை ரயில் நிலையத்திலேயே ரயில்வே நிர்வாகம் அமைக்க விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

சிலம்பு எக்ஸ்பிரஸ் விரைவு ரயிலை தினசரி ரயிலாக மாற்ற வேண்டும். மூத்த குடிமக்களுக்கு தட்கல் டிக்கெட் எடுக்க தனி கவுண்டர் அமைக்க வேண்டும். தென்காசியை தனி மாவட்டமாக அறிவித்துள்ள நிலையில் அரசு அலுவலகங்களை அனைத்து மக்களும் வந்து செல்லும் வகையில் தென்காசி நகரின் மையப் பகுதியில் அமைக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்தில் தென்காசி, மேலகரம், செங்கோட்டை,கடையநல்லூர், புளியங்குடி,  வாசுதேவநல்லூர், சிவகிரி, கடையம், பாவூர்சத்திரம், சுரண்டை உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த ஓய்வூதியர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர். பொருளாளர் வேலாயுதம் நன்றி கூறினார்.

Related Stories: