ராஜபாளையம் அருகே வனவிலங்கு வேட்டையாட முயன்ற இருவர் கைது நாட்டு வெடிகுண்டுகள் பறிமுதல்

ராஜபாளையம், செப். 19: ராஜபாளையம் அருகே வன விலங்குகளை வேட்டையாட முயன்ற இருவரை வனத்துறையினர் கைது செய்துள்ளனர். அவர்களிடம் இருந்து 5 நாட்டு வெடி குண்டுகள், அரிவாள், செல்போன், டூவீலர் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ராஜபாளையம் அருகே சுந்தரராஜபுரம் மேற்கே உள்ள மலையடிவாரம் புல்லு பத்திக்காடு பகுதியில் வன விலங்குகள் வேட்டையாடப்படுவதாக வனத்துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. தகவலின்பேரில், வனச்சரக அலுவலர் சுப்பிரமணியன் தலைமையில், வனவர் குருசாமி உள்ளிட்ட 7 பேர் கொண்ட குழுவினர் நேற்று அதிகாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த பகுதியில், சந்தேகத்திற்கு இடமான வகையில் இருவர், டூவீலரில் சுற்றித் திரிந்தனர். அவர்களை பிடித்து விசாரித்தபோது, சுந்தரராஜபுரத்தை சேர்ந்த கணேசன் (38 ) மற்றும் சிவராமகிருஷ்ணன் (21) என தெரிந்தது. அவர்களிடம் இருந்த பையை சோதித்து பார்த்தபோது, இரண்டு அரிவாள்கள் மற்றும் தையல் இயந்திரத்தில் பயன்படுத்தும் நூல் கண்டு இருந்தது. விசாரணையில் இருவரும் வன விலங்குகளை வேட்டையாடுவதற்காக, விலங்குகள் வரும் பாதையில் பழங்களுக்குள் நாட்டு குண்டுகளை மறைத்து வைத்துவிட்டு காத்திருப்பது தெரிய வந்தது. அவர்களை கைது செய்த அதிகாரிகள், மறைத்து வைத்திருந்த நாட்டு வெடி குண்டுகள், வேட்டையாட பயன்படுத்திய டூவீலர் வாகனம் மற்றும் அரிவாள் ஆகியவற்றை பறிமுதல் செய்து வனச்சரக அலுவலகத்திற்கு கொண்டு வந்தனர். இருவரையும் கைதுசெய்து நீதிமன்றத்தில் ஒப்படைத்தனர்.

Related Stories: