×

சமூக விரோதிகளின் புகலிடமான மினி விளையாட்டு மைதானம் சேதமான மின் விளக்குகள் மவுனத்தில் விளையாட்டு துறை

பரமக்குடி, செப்.19:  பரமக்குடி வாரசந்தை திடலில் உள்ள மினி விளையாட்டு அரங்கில் முறையான பராமரிப்பு இல்லாததால், சமூக விரோதிகளின் புகலிடமாக மாறி வருகிறது. இதனை தடுக்க வேண்டிய விளையாட்டுத்துறை அதிகாரிகள் கண்டு கொள்ளாமல் உள்ளனர். பரமக்குடியில் பள்ளி மற்றும் கல்லூரி மாணவ,மாணவிகளின்,விளையாட்டு திறனை ஊக்கப்படுத்தும் வைகையில், விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தால் ரூ.30 லட்சம் மதிப்பீட்டில் வாரச்சந்தை திடலில் மினி விளையாட்டு அரங்கு 2007ம் ஆண்டு அமைக்கப்பட்டது. பொருள்கள் வைப்பதற்கு தனி அறைகளும், விளையாட்டு வீரர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் ஓய்வு எடுப்பதற்கு தனித்தனி அறைகள் கட்டப்பட்டுள்ளது. ஒட்டபந்தய களம், உயரம், நீளம் தாண்டுதல், கால்பந்து, ஹாக்கி உள்பட பல போட்டிகள் நடத்த வசதியாக மினி விளையாட்டு அரங்கம் கட்டப்பட்டது. சுற்றிலும் சுற்றுச்சுவர் எடுக்கப்பட்டு பாதுகாப்புடன் இருந்தது. தொடக்கத்தில் பாதுகாவலர் பணி நியமனம் செய்து முறையாக பராமரிப்பு செய்த நிலையில், கடந்த 5 ஆண்டுகளுக்கு மேல் முறையான பராமரிப்பு இல்லாமல் பயனற்றும் வீரர்களின் அறைகளின் கீழ் தளம் சேதமடைந்து சிமென்ட் பெயர்ந்து காணப்படுகிறது. விளையாட்டு அரங்கின் உள்பகுதியில் வைக்கப்பட்டிருந்த மின் விளக்குகள் மர்ம நபர்களால் உடைத்து சேதப்படுத்தப்பட்டு எரியாமல் உள்ளது. இதனால் இரவு முழுவதும் இருளில் முழ்கிய நிலையில் உள்ளது. மாதந்தோறும் நடைபெறும் தடகளப் போட்டிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. பரமக்குடி பகுதியில் உள்ள பல்லாயிரம் மாணவ,மாணவிகளுக்கு உரிய பயிற்சி களம் இன்றி பள்ளி மற்றும் கல்லூரிகளின் விளையாட்டு திடல்களில் உபகரணங்கள் இன்றி முறையான வழிகாட்டுதல் இல்லாமல் பயிற்சி பெற்று வருவதால் மாணவர்களுக்கு விளையாட்டில் ஆர்வம் குறைந்து வருகிறது. ராணுவம், போலீஸ் உள்பட பல வேலைகளுக்கு உடற்தகுதி தேர்வுக்கு செல்பவர்களுக்கு பயிற்சி மேற்கொள்ள போதுமான இடமின்றி தவித்து வருகின்றனர்.

கடந்த 3ஆண்டுகளுக்கு முன் விளையாட்டு காம்பவுன்ட் சுவரில் இருந்த கதவுகளும், அறைகளில் இருந்த கதவுகளும் திருடப்பட்டுள்ளது. அதுபோல் விளையாட்டு  அரங்கில் இருந்த கதவுகளும், விளையாட்டு உபகரணங்களும் கொள்ளை அடிக்கப்பட்டுள்ளது. இதனால் பகல்,இரவு என பார்க்காமல் சமூக விரோதிகள் அறைகளை பாராக மாற்றி வைத்துள்ளனர். சந்தை பகுதியிலிருந்து பர்மா காலனி உள்ளிட்ட தெருக்களுக்கு செல்ல சுற்றுச்சுவர் சேதப்படுத்தி வழி ஏற்படுத்தப்பட்டுள்ளது.
இதனால் ஓட்டபந்தயம் தடங்கள் சிதைந்து விட்டது. இதனால் மாணவர்களின் விளையாட்டு  திறனை வளர்க்க முடியாமல் வீட்டிற்குள்ளேயே முடங்கியுள்ளனர். விளையாட்டில் ஆர்வம் உள்ள மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக ஆசிரியர்களின் ஒத்துழைப்புடன் மற்ற மாவட்டங்களில் பயிற்சிக்கு கொண்டு செல்லும் நிலை தொடர்கிறது. ஆகையால் மாவட்ட விளையாட்டு அதிகாரிகள் மற்றும் கலெக்டர் நடவடிக்கை எடுத்து மினி விளையாட்டு அரங்கினை சீர் செய்து பயன்பாட்டிற்கு கொண்டு வரவேண்டும் என்பது பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.

இடமின்றி தவிப்பு
இதுபற்றி வீரபாண்டி கூறுகையில், மாவட்ட அளவிலான போட்டிகள் இந்த மைதானத்தில் நடத்தப்பட்டு வருகிறது. அதேபோல் ஏப்ரல்,மே ஆகிய விடுமுறை நாட்களில் வீரர்களுக்கு உண்டு, உறைவிட பயிற்சிகள் கொடுக்கப்படுகிறது. தற்போது 5 ஆண்டுகளாக தண்ணீரின்றி கழிப்பறைகள் மற்றும் வீரர்களின் அறைகள் சேதமடைந்தும் காணப்படுகிறது. தற்போது மின்சார வசதிகள் இல்லாமல் இருளில் முழ்கியுள்ளது. இதனால் மாதந்தோறும் நடக்கும் தடகள போட்டிகள் முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. விளையாட்டு உபகரணங்கள் இல்லாததால் மாணவர்களுக்கு விளையாட்டு ஆர்வம் குறைந்து வருகிறது. ராணுவம், போலீஸ் உடற்கல்வி தேர்வுக்கு செல்பவர்கள் பயிற்சி மேற்கொள்ள இடமின்றி தவிக்கின்றனர்.

Tags : mini-playground ,sports department ,
× RELATED நீட் தேர்வுக்கு எதிராக திமுக நடத்தும்...