×

நீட் தேர்வுக்கு எதிராக திமுக நடத்தும் கையெழுத்து இயக்கம் அரசியல் கட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உள்ளது: ஐகோர்ட் கருத்து

சென்னை: நீட் தேர்வுக்கு எதிராக 50 லட்சம் கையெழுத்துக்களை பெறும் இயக்கத்தை தமிழ்நாடு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கியுள்ளார். இந்த இயக்கத்தில் இணைந்து கையெழுத்திடும்படி, பள்ளி மாணவர்கள் நிர்பந்திக்கப்படுவதாக கூறி, தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் வழக்கறிஞர் எம்.எல்.ரவி சென்னை உயர் நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், நீட் தேர்வு தொடர்பாக மத்திய அரசு இயற்றிய சட்டத்தை உச்ச நீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில், அந்த சட்டத்துக்கு எதிராக மாநில அமைச்சர், போராட்டம் அறிவிக்க முடியாது.

கையெழுத்து இயக்கம் தொடர்பாக அரசு எந்த அறிவிப்பும் வெளியிடாத நிலையில், இதை அரசின் கொள்கையாக கருத முடியாது. இந்திய அரசியலமைப்பின் பால் உண்மையும், மாறா பற்றும் கொண்டிருப்பதாக பதவியேற்றுக் கொண்ட அமைச்சர், சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்த முடியாது. பள்ளிகளில் இந்த கையெழுத்து இயக்கம் நடத்தப்படுகிறது. மாணவர்கள் நிர்பந்தத்துக்கு உள்ளாக்கப்படுகிறார்கள். எந்த அனுமதியும் பெறாமல் நடத்தப்படும் இந்த கையெழுத்து இயக்கத்தை அமைச்சரே தொடங்கியுள்ளார். ஆசிரியர்களும், அதிகாரிகளும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.

பள்ளி வளாகத்தில் எந்த அரசியல் நடவடிக்கைகளையும் அனுமதிக்க கூடாது. இதனால், நீட் தேர்வுக்கு தயாராக வேண்டாம் என்ற எண்ணம் மாணவர்கள் மனதில் ஏற்படும். படிப்பில் இருந்து மாணவர்களின் கவனம் திசை திரும்பும். அதனால் பள்ளிகளில் கையெழுத்து இயக்கம் நடத்த அனுமதிக்க கூடாது என்று பள்ளிக்கல்வித் துறைக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு தலைமை நீதிபதி எஸ்.வி.கங்காபுர்வாலா மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள், கையெழுத்து இயக்கத்தால் மனுதாரர் எப்படி பாதிக்கப்படுகிறார்? நீட் தேர்வு விஷயத்தில் மத்திய அரசு ஏதேனும் முடிவெடுத்து, அது மாணவர்கள் நலனுக்கு விரோதமாக அமைந்தால் வழக்கு தொடரலாம்.

அரசியல் கட்சிக்கு எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உள்ளது. இதுபோல் பொதுநல வழக்குகளை தாக்கல் செய்ய ஒரு வரம்பு உள்ளது. எனவே, மனுதாரர் தனது உண்மைத்தன்மையை நிரூபிக்க ஒரு லட்சம் ரூபாயை உயர் நீதிமன்ற பதிவாளரிடம் டெபாசிட் செய்தால் வழக்கை விசாரிக்கிறோம் என்றனர். இதையடுத்து, வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதை ஏற்றுக் கொண்டு வழக்கை வாபஸ் பெற அனுமதித்ததுடன் வழக்கை முடித்து வைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், சமுதாயத்துக்கு நலன் தருவதாக இருந்தால் பொது நல வழக்குகளை ஏற்கலாம் என்றும் நீதிபதிகள் குறிப்பிட்டனர்.

The post நீட் தேர்வுக்கு எதிராக திமுக நடத்தும் கையெழுத்து இயக்கம் அரசியல் கட்சிகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்க உரிமை உள்ளது: ஐகோர்ட் கருத்து appeared first on Dinakaran.

Tags : DMK ,NEET ,ICourt ,Chennai ,Tamil Nadu Youth Welfare and Sports Department ,
× RELATED நீட் தேர்வில் முறைகேடு : நாடு முழுவதும் 50 பேர் கைது